நல்லாட்சியின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கோட்டாபயவின் ஆட்சி!
இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர 2020க்கு முந்தைய வரி விதிப்பை நடைமுறைப்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய வரி கட்டமைப்பு நிலையானது அல்ல என்று மத்திய வங்கியின் ஆளுநரும் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனவே 2020 ஆம் ஆண்டுக்கு முன்னதாக நடைமுறையில் இருந்த வரிக் கட்டமைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இலங்கை, தற்போதைய பொருளாதாரத்தை மீண்டும் சீரான பாதையில் கொண்டு வருவதற்கு சில கடினமான தெரிவுகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்சம் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும் வரிக் குறைப்புகளுக்கு முன்னர் இருந்த வரிகளை மீண்டும் அறிமுகப்படுத்த அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்,
இலங்கையின் பொருளாதாரத்தை மீள் எழுச்சி பெறுவதற்காக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொண்டது.
ஆனால் 2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச நிர்வாகம், வருவாயை அடிப்படையாகக் கொண்ட மூன்றாண்டு பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டத்தை முன்கூட்டியே நிறுத்திவைத்தது.
இலங்கையின் உத்தியோகபூர்வ பணவீக்கச் சுட்டெண் கடந்த ஏப்ரலில் ஏறக்குறைய 30 வீதத்தால் அதிகரித்தது,
அத்துடன் மார்ச் 7 ஆம் திகதியன்று, நாணய மிதப்பு அறிமுகப்படுத்தப்பட்டமையை அடுத்து, நாளாந்த அத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும்; அதிகரித்ததன் காரணமாக நாடு மிகை பணவீக்கத்துக்கு தள்ளப்பட்டது.



