யுனிசெப் அறிக்கையை நிராகரித்த சுகாதார அமைச்சகம்
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்ட (UNICEF) இலங்கையில் சிறார் போஷாக்கின்மை தொடர்பான சமீபத்திய அறிக்கையை இலங்கையின் சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
யுனிசெப் அறிக்கையை மறுத்துள்ள இலங்கையின் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இந்த அறிக்கையை தொகுக்க யுனிசெப் பயன்படுத்திய தரவுகள் திருப்திகரமாக இல்லை என்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள இரண்டாவது நாடு
அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த UNICEF இன் தெற்காசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் ஜோர்ஜ் லரி அட்ஜே, தெற்காசியாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள இரண்டாவது நாடாக இலங்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்களின் உணவுப்பழக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நாளுக்கு நாள் உணவுப் பொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான கணக்கெடுப்பின்படி, இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போஷாக்கின்மை நிலை 13.2 வீதத்தால் குறைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், நீண்ட கால தரவுகளின் அடிப்படையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் அதிகரித்துள்ளது என்று கூறும் யுனிசெப் அறிக்கை தவறானது என்று இலங்கையின் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஊட்டச்சத்துக் குறைபாட்டின் நிலையைக் கணக்கிடுதல்
ஊட்டச்சத்துக் குறைபாட்டின் நிலையைக் கணக்கிடுவதற்கு மூன்று காரணிகள் அடிப்படையாக அமைகின்றன அவையாவன- வளர்ச்சி, வீண்விரயம், மற்றும் உயரத்திற்கான எடை ஆகியவை குறுகிய காலத்திற்கு பரிசீலிக்கப்பட வேண்டும், ஆனால் UNICEF ஆனது தனியாக வீணாக்குதல் மற்றும் நீண்ட காலத்தை பயன்படுத்தி தவறான அறிக்கையை தயாரித்துள்ளது.
யுனிசெப் ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு வருடங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்ததாகவும், இலங்கைக்கான 1995 முதல் 2019 வரையிலான நீண்ட கால ஆய்வுகளின் தரவுகள் ஒப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை ஆண்டு இன்மை
UNICEF அறிக்கையானது 2016 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மற்றும் சுகாதார கணக்கெடுப்புத் தரவுகளை எடுத்து நாட்டிற்கு 15 சதவிகிதமாக கருதப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் அடிப்படை ஆண்டு இல்லாமல் UNICEF வெளியிட்ட அறிக்கை தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.