கொஞ்சமாவது மூளையை பாவியுங்கள்! தமிழர் சார்பில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்(Video)
வடக்கு கிழக்கில் கடந்த 30 ஆண்டு போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த போசாக்கின்மையை நாட்டில் உள்ள சிங்கள சகோதரர்கள் யோசிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(06) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
மனித வளத்தை பாதிக்கும் போசாக்கின்மை
மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் போசாக்கின்மை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் பேசப்படுகின்றபோது, அரசாங்க அமைச்சர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது சுட்டிகாட்டப்பட வேண்டிய விடயமாகும்.
இதேவேளை இன்று நாட்டில் போசாக்கின்மை தொடர்பாக பேசப்படுகின்ற போது, வடக்கு கிழக்கில் கடந்த 30 ஆண்டு போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த போசாக்கின்மையை நாட்டில் உள்ள சிங்கள சகோதரர்கள் யோசிக்க வேண்டும்.
போசாக்கின்மையால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்டமே முதன்மையான மாவட்டமாகும்.
சந்திரிக்கா காலம் முதல் மகிந்த காலம் வரையில் வடக்கு கிழக்கில் உணவுத்தடை விதிக்கப்பட்டு மக்கள் கஸ்டப்பட்டு இறந்த நிலைமையை இன்று சிங்கள மக்களால் தென்னிலங்கையில் பார்க்க முடிகிறது.
இலங்கையின் அமைதியின்மையில் தாக்கம் செலுத்தும் சீனா
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் கடலட்டைக்காக வழங்கப்பட்டுள்ள இடங்களில் சீனாவின் நிறுவனம் ஒன்றில் செயற்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீன நிறுவனத்தினால், அங்குள்ள மக்கள் போசாக்கின்மை உள்ளவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் பேசும் சீனா, இலங்கையின் அமைதியின்மையில் மறைமுகமாக மோசமாக செயற்பட்டு வருகிறது.
கிளிநொச்சியில் கடல் தொழிலுக்கு சென்ற ராசரட்ணம் நிமால் என்பவர் கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளார். இதற்கு எந்த காரணங்களும் இல்லை.
எனினும் கடற்படையினர் மதுபோதையில் இருந்தால், தமிழர்கள் தாக்கப்படுகின்ற நிலை உருவாகியுள்ளமையே இதனை உணர்த்துகிறது.
இராணுவத்திற்கு காணி
பச்சிலைப் பள்ளியில் இராணுவத்திற்கு 1840 ஏக்கர் காணியை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் 14ஆயிரம் பேருக்கு காணியில்லை. கிளிநொச்சியில் 4000 பேருக்கு காணியில்லை.
எனினும் பலாலியில் படையினர் 3000 ஏக்கரில் தோட்டம் செய்கின்றனர். கொஞ்சம் என்றாலும் மூளையை பாவியுங்கள்! இராணுவம் தோட்டம் செய்வதன் மூலம் நாட்டின் போசாக்கின்மையை தீர்க்கமுடியுமா?
இந்தநிலையில் 80 வருட இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்காகவே மாகாணசபை கொண்டு வரப்பட்டது.
எனினும் வடக்கு மாகாணத்தில் தகுதியுள்ள அரச சேவையாளர்கள் இருக்கின்ற போதும், அங்கு சிங்களவர்கள் நியமிக்கப்படுகின்ற நிலைமையானது, ஆக்கிமிப்பு செயற்பாடாகும்.” என கூறியுள்ளார்.