அரசாங்கத்தின் மானியங்களை பெறுவதில் பாரிய மோசடி: ரஞ்சித் சியம்பலாபிட்டிய குற்றச்சாட்டு
இலங்கையில் அதிக வருமானம் பெறும் வகுப்பினரில் 12 சதவீதமானோர் அரசாங்கத்திடம் இருந்து மோசடியான முறையில் மானியங்களைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்குறித்த தகவலைத் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நலன்புரிச் சலுகைகள் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சட்டத்தை முறையாக நடைமுறைபடுத்துவதன் மூலம் நலன்களைப் பெற்றுக்கொள்வதில் தகவல்களை வழங்குவதும், தகவல்களைச் சேகரிப்பதும் பொறுப்பாகும் என்றும், அரச அதிகாரிகள் சில சமயங்களில் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயங்குவதால், தகவல்களைச் சேகரிக்க ஏனைய பயிலுனர் குழுக்களை ஈடுபடுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிவாரணத் திட்டம்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சமுர்த்தி வங்கி முறையை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இந்த திட்டத்தின் கீழ் உண்மையிலேயே தேவைப்படுகின்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதும், பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உதவி தேவைப்படாத நிலைக்கு அவர்களை வழிநடத்துவதும் இந்தத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அரசியல், இனம் அல்லது வேறு வேறுபாடின்றி குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் சிரமத்தில் வாழும் சொந்த நாட்டு மக்களுக்கு உதவிகளை வழங்குவதே எங்களின் முதன்மையான நோக்கமாகும்.
நிவாரணத் திட்டத்திற்கான முறையீடுகளை ஏற்கும் கடைசி நாளான ஜூலை 10 வரை, கிட்டத்தட்ட 960,000 முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளன.
அந்த முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீது முழு கவனம் செலுத்தி விரைவில் இந்த திட்டத்தை தொடங்குவோம் என்று நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |