ஐ.நா. மாநாட்டில் உரையாற்ற இலங்கை மாற்றுத்திறனாளிகள் உரிமை செயற்பாட்டாளருக்கு அழைப்பு
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் உறுப்பு நாடுகளின் மாநாட்டின் 19ஆவது அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த இலங்கை மாற்றுத்திறனாளிகள் உரிமை செயற்பாட்டாளர் நில்ஷானி டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த மாநாடு, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்த உலகின் முதன்மையான மன்றமாகக் கருதப்படுகிறது.
இது உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளித் தலைவர்களை ஒன்றிணைக்கிறது.
ஐ.நா. மாநாடு
நில்ஷானி டி சில்வா இலங்கையின் இளைஞர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஜூன் 9 அன்று நடைபெறும் மாநாட்டின் தொடக்க அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் பிற சர்வதேசத் தலைவர்களுடன் உரையாற்ற அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டுடன் பிறந்த நில்ஷானி டி சில்வா, மாற்றுத்திறனாளிகள் உரிமை ஆர்வலர், ஊக்கமூட்டும் பேச்சாளர், ஆசிரியர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற நபர் ஆவார்.
நில்ஷானியின் பங்கேற்பு
இவர் , மாற்றுத்திறனாளிகளைச் சுற்றியுள்ள தவறான கண்ணோட்டங்களை நீக்குவதில் விரிவாகப் பணியாற்றியுள்ளார்.
2007-ல் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கையில் (CRPD) கையொப்பமிட்டு, 2016-ல் அதனை அங்கீகரித்த இலங்கை, இவ்வாண்டு உறுப்பு நாடுகளின் மாநாட்டின் 19-வது அமர்வுக்கும் தலைமை தாங்கும்.

மாற்றுத்திறனாளிகளைப் பாதிக்கும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பிரதிநிதித்துவம் மற்றும் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், நில்ஷானியின் பங்கேற்பு இலங்கைக்கும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகப் பாராட்டப்படுகிறது.