இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இலங்கை கிரிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீர, பெண் வீராங்கனையிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குற்றச்சாட்டு
துலிப் சமரவீர, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
இதன்போது பெண் வீராங்கனை ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக அவர் மீது பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் ஏ அணிக்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய ஏ அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படக்கூடிய பட்டியலில் துலிப் சமரவீரவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
எனினும் இந்த தகாதசெயற்பாடு குறித்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் அந்த வாய்ப்பிலிருந்து விலகிக் கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகள்
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் தற்போதைக்கு எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை எனவும் விக்டோரியா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துலிப் சமரவீர, இலங்கை அணியின் சார்பில் 5 டெஸ்ட் மற்றும் 7 ஓருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதுடன் நட்சத்திர கிரிக்கட் வீரர் திலான் சமரவீரவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக துலிப் சமரவீர, அவுஸ்திரேயியாவில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அந்த சம்பவம் தொடர்பான விபரங்களை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிடவில்லை.