இலங்கை கிரிகெட் வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண் ஒருவர் தேசிய அணிக்கு தெரிவு (Photos)
இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான 30 பேர் கொண்ட தேசிய அணியில் முதல் முறையாக தமிழ்ப்பெண்ணான சதாசிவம் கலையரசி இடம்பெற்றிருக்கிறார்.
கலையரசி கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரி மாணவி ஆவார். இந்நிலையில், அவரை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (16) காலை பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கௌரவிக்கப்பட்ட மாணவி
கரடிப்போக்கு சந்தியிலிருந்து பாடசாலை முதல்வரால் மாணவிக்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு வாகனத்தில் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து செல்லப்பட்டு பாடசாலை மண்டபத்தில் மாணவி கெளரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக உதவிப்பிரதேச செயலாளர், மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட கலையரசிக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதே கனவாக இருந்த நிலையில் தற்போது அது நிஜமாகியுள்ளது.
உள்ளூர் பயிற்சியாளரான ஜீவரத்தினம் ப்ரியதர்ஷன் தான் தொடர்ந்து கலையரசிக்கு கிரிக்கெட் பயிற்சியளிக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளரான அவர், சமீபகாலமாக துடுப்பாட்டத்திலும் அசத்தி வருகிறார்.
தனது 16வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே கலையரசி தேசிய அணியில் தேர்வான செய்தி வந்திருக்கிறது.
குடும்ப வறுமையிலும் தந்தை மற்றும் பயிற்சியாளர் அளித்த ஊக்கத்தின் காரணமாகவும் தனது கடும் உழைப்பாலும் கலையரசி தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.