இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் ஜப்பான்: சீனாவின் நிலைப்பாட்டால் ஏற்பட்டுள்ள குழப்பம்
இலங்கைக்கு கடன் வழங்கியுள்ளவர்களின் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்ய ஜப்பான் முயற்சித்து வருவதுடன் இது இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை எதிர்நோக்கி இருக்கும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நோக்கில் ஜப்பான் கடன் வழங்கியுள்ள சகல நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்கான வழியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.
சீனா இணையுமா?
எனினும் இலங்கைக்கு அதிகளவில் கடன் வழங்கியுள்ள சீனா இதில் கலந்துக்கொள்ளுமா என்பது தெளிவில்லை என்பதுடன் இலங்கையிடம் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவான குறைப்பாடு காணப்படுகிறது எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு அடிப்படையில் 6.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ள இலங்கை பெற்றுள்ள கடனை திரும்ப செலுத்தும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டால்,சீனாவுடன் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சந்திப்பிற்கு தலைமை தாங்க ஜப்பான் தயாராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் முன்வைத்த கோரிக்கை
இந்த நிலையில், இருத்தரப்பு கடனை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கடன் வழங்கும் பிரதான நாடுகளுக்கு அழைப்பு விடுக்குமாறு இலங்கை, ஜப்பானிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் அஸ்தி சம்பந்தமான இறுதிக்கிரியைகளில் கலந்துக்கொள்ள எதிர்பார்த்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இதன் போது டோக்கியோவில் ஜப்பான் பிரதமர் புஃமியோ கிஷிடாவை சந்தித்து இலங்கையின் கடன் நெருக்கடி தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கடந்த புதன் கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தது.
29 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பது மற்றும் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவித்திட்டத்தின் கீழ் எதிர்பார்த்துள்ள 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி உள்ளிட்ட விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியை சந்தித்துள்ளது.