சீன அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்திற்கு 8 மில்லியன் ரூபா நிதி உதவி
இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் சீனாவினால் (China) கிழக்கு மாகாணத்திற்கு 8 மில்லியன் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதர் கீய் சென்ஹோங் (Qi Zhenhong) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவை (Jayantha Lal Ratnasekera) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதனையடுத்து, நேற்று (20) ஆளுநர் செயலகத்தில் சீனத் தூதுவரால் இந்த நிதி கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நிதி உதவிகள்
இதன் போது, இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, முன் எடுக்கப்படக்கூடிய வேலை திட்டங்கள் தொடர்பில், முன்னெடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்தநிலையில், சீன தூதுவர் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாண ஆளுநரின் இந்த உபசரிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வெளிப்படுத்துகின்றது.
பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் எமது இலங்கை சகோதர சகோதரிகளுக்கு சீன அரசாங்கமும் அதன் மக்களும் எதிர்காலத்தில் இயன்ற அளவு உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையின் கிழக்கு மாகாணமும் சீனாவின் ஜுரான் மாகாணமும் இணைந்து, சகோதரர பிணைப்பை கொண்ட ஒரு கட்டமைப்பை கட்டி எழுப்புவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இந்த கட்டமைப்பின் கீழ், இரு மாகாணங்களுக்கும் பொருளாதார செயற்பாடுகளை விரிவாக்கி பகிர்ந்து கொள்ளும் நட்புறவு வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம்.
சீனா - இலங்கை நட்புறவு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் பலமான தலைமைத்துவத்தின் கீழ், இலங்கை ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்துள்ளது.
இலங்கை நாட்டின் எங்களுடைய சகோதர, சகோதரிகள் அரசியலில் வரலாறு ஒன்றை எழுதி உள்ளனர். இதன் காரணமாக இலங்கையின் எதிர்காலம் மென்மேலும் சிறப்பாக அமைய உள்ளது அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதன் போது, கிழக்கு மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், சீன அரசாங்கம் இலங்கைக்கு நல்ல ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, வாழ்வாதார மேம்பாட்டுக்காக, இன்று நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த உதவிகள் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்துக்கு இன்று வழங்கப்பட்ட 8 மில்லியன் ரூபாவும் நிதி, சீனாவின் ஜுரான் மாகாணத்திற்கும் இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு செயல்திட்டம் ஒன்றின் ஆரம்ப கட்டம் எனவும், இதன் மூலம் சீனா - இலங்கை நட்புறவு விருத்தி அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |