ஜனாதிபதி செயலக வளாகத்தில் பதற்றம்! களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படை, கலக தடுப்பு பிரிவு (Video)
ஐக்கிய மக்கள் சக்தியால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தை அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வெளியே வருமாறு அழைப்பதுடன், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கான பலத்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் முக்கிய பகுதியான காலிமுகத் திடலிலுள்ள ஜனாதிபதி செயலக முன்றலை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.
அதேவேளை ஜனாதிபதி செயலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஜனாதிபதி செயலக முன்றலில் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகிலிருந்தும், பி.டி.சிரிசேன மைதானத்திற்கு அருகிலிருந்துமென இரு இடங்களில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பமாகியிருந்தன.
இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மக்களுடன் ஆர்ப்பாட்டப் பேரணியில் இணைந்துள்ளார்.
இதன்போது மக்கள் சவப்பெட்டியை சுமந்து வருவதை காணக்கூடியதாக இருப்பதுடன், பலர் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச போன்று வேடமிட்டு இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் பசில் போன்று வேடமிட்டவர்கள் “என்னால் நாட்டை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது, மன்னித்து விடுங்கள்” என ஒப்பாரியுடன் கூறிக்கொண்டு பேரணியில் இணைந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
கொழும்பை முற்றுகையிட்டு குறித்த போராட்டம் மாபெரும் அளவில் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான பொது மக்கள் கொழும்பு நோக்கி படையெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி ஹட்டன், பொலன்னறுவை, காலி ஆகிய பிரதேசங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கொழும்பை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஹைலெவல் வீதி, மாளிகாவத்தை, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.