கிண்ணியா படகு விபத்துக்கு இவர்கள் தான் காரணம்! நாடாளுமன்றத்தில் கோபமடைந்த ராஜாங்க அமைச்சர்
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கும் கிண்ணியா நகர சபையே திருகோணமலை கிண்ணியா, குருஞ்சான்கேணி களப்பு ஊடாக பயணிகள் படகு சேவைக்கு அனுமதி வழங்கியதாக ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா (Nimal Lanza) தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த துரதிஷ்டவசமான சம்பம் குறித்து அரச தப்பினர் மீது குற்றம் சுமத்த எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட நடவடிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நிமல் லங்சா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் உயிர்கள் பலியானமைக்கு அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது. இது சம்பந்தமாக உரிய விசாரணைகளை முன்னெடுப்போம்.
இந்த படகை சேவையில் ஈடுபடுத்தியமைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீண்டகாலமாக இந்த களப்பு ஊடாக பாலத்தை நிர்மாணிக்க முடியவில்லை. இதற்கான கடந்த நல்லாட்சி அரசாங்கமும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எமது அரசாங்கம் கிண்ணியா மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களுக்கு தீர்வாக பாலத்தை நிர்மாணிக்க ஆரம்பித்தோம். அதனை துரிதமாக நிர்மாணித்து முடிக்க நடவடிக்கை எடுப்போம்.
பாதுகாப்பற்ற இந்த படகை பயன்படுத்த சம்பந்தப்பட்ட நகர சபை அனுமதி வழங்கியதால், துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. உரிய தரத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை களப்பின் ஊடாக செல்லும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் எனவும் நிமல் லங்சா குறிப்பிட்டுள்ளார்.