முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஆறாம் நாள் கஞ்சி பரிமாறும் நிகழ்வு
முள்ளிவாய்க்காலில் (Mullivaikal) 2009ஆம் ஆண்டு மே 18 தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன படுகொலையையிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதிவரை கஞ்சிவாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்று (17.05.2024) வடக்கு மற்றும் கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவு
தமிழின படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான இன்று (17) முல்லைத்தீவு நகர் பகுதியில் மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டுள்ளது.
இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி - ஷான்
முறிகண்டி
இந்நிலையில், முறிகண்டியில் மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.
செய்தி - எரிமலை
மட்டக்களப்பு
பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் ஆறாவது நாளாகவும் மட்டக்களப்பில் (Batticaloa) முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பின் நுழைவாயிலான பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதுடன். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
செய்தி - குமார்
யாழ்ப்பாணம்
வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் (Jaffna) குருநகரில் இன்று வழங்கப்பட்டுள்ளது.
மே18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூறும் வகையிலான கஞ்சி வழங்கும் நிகழ்வினை குருநகர் கர்த்தர் ஆலயத்திற்கு முன்பாக வேலன் சுவாமிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், 'இறுதி யுத்தத்தின் போது ஒன்றரை இலட்சம் மக்களுக்கு மேல் இலங்கை இராணுவத்தினால் கொலை செய்யப்பட்டள்ளனர் எனவும் இவ்வாறு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு இதுவரையும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைத்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது.
மேலும்,பசுமை இயக்கத்தின் கஞ்சி பரிமாறுதலின்போது தென்னம்பிள்ளைகளும்
வழங்கி வைக்கப்படடன.
செய்தி - தீபன், கஜிந்தன்
சுப்பர் மடம்
முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து இன்று பிற்பகல் 4:00. மணியளவில் சுப்பர் மடம் மக்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இதில் பிரதேசத்திற்கு உட்பட்ட இளைஞர்கள், யுவதிகள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கஞ்சியை பருகியுள்ளனர்.
செய்தி - எரிமலை
யாழ். கொக்குவில்
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை தலைமுறைகளிற்கு கடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது கொக்குவில் இந்துக் கல்லூரியை அண்மித்த பகுதிகளில் இன்றைதினம் (17.05.2024) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வாரத்தினை முன்னிட்டு தினமும் பல்வேறுபட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் புதிதாக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீட மாணவர்களினால் குறித்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு சிறிலங்கா ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரின் போது தமிழ் மக்களின் உயிர் காத்த உணவான முள்ளிவாய்க்கால்க் கஞ்சி தமிழர் தாயகமெங்கும் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் பல்வேறுபட்ட தரப்பினராலும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (17) கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிகுளம் இளைஞர்கள், முச்சக்கரவண்டி சங்கத்தினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து மே 18 முள்ளிவாய்க்கால் அவலத்தினை நினைவு கூறும் வகையில் உப்புக்கஞ்சி வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில், பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இறந்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு உப்பு கஞ்சி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
செய்தி : காண்டீபன்
முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா, தவசிகுளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் பலர் இணைந்து குறித்த கஞ்சி தவசிகுளம் பிரதான வீதியில் வைத்து இன்று (17.05) வழங்கி வைக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மக்கள் முள்ளிவாய்கால் கஞ்சியினை உணவாக உட்கொண்டே உயிர் பிழைத்தனர்.
அதன் 15 ஆவது ஆண்டினை நினைவு கூர்ந்தும், அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை கடத்தும் நோக்குடன் இவ்வாறு கஞ்சி வழங்கப்பட்டது. வீதியால் சென்ற பலரும் அதனை வாங்கி பருகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - திலீபன்
தமிழரசுக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்திக்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் இடம்பெற்றன.
இதன்போது, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். சுகிர்தன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி : காண்டீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |