காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு கடலில் காத்திருக்கும் பாரிய ஆபத்து
ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் தனியார் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய எண்ணெய் கப்பல்கள்
காலி துறைமுகத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு அருகே இந்தக் கப்பல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) விதித்துள்ள தடைகளுக்கு உட்பட்ட ஈரானின் ‘Dark Fleet’ உடன் தொடர்புடைய இந்தக் கப்பல்கள், அமெரிக்காவின் சர்வதேச தடைகளை மீறி எண்ணெயை ஏற்றிச் செல்வதாக சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் டொக்டர் ஜனித ருவன் கொடிதுவக்கு, குறித்த கப்பல்கள் தற்போது இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு வெளியே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த எண்ணெய் கப்பல்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கும் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தடை
“அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட கப்பல்கள் எவை என்பதை அடையாளம் காண எங்களிடம் நேரடி வழிமுறை இல்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் பட்டியல் மட்டுமே எங்களுக்குக் கிடைக்கிறது.
அமெரிக்கத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அதிகாரப்பூர்வமாக எங்களுக்குத் தகவல் வழங்கினால், அந்தக் கப்பல்கள் தொடர்பில் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும்” என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இலங்கை கடற்படை இந்தக் கப்பல்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை இவ்வாறான கப்பல்களை இடைமறிக்க முயற்சித்தால், இலங்கையின் கடற்கரைக்கு அருகில் மோதல் நிலைமை ஏற்படக்கூடும் எனவும், இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்ற பாரிய கடல் மாசுபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
காலி கடற்பரப்பு
நிபுணர்களின் கருத்துப்படி, மலேசியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தக் கப்பல்கள், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் அமெரிக்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் தங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

‘MT Amber’ உள்ளிட்ட சில கப்பல்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியிலிருந்தே காலி கடற்பரப்புக்கு அருகில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிரமான நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அல்லது துறைமுக அதிகார சபையின் உயர்மட்ட அதிகாரிகளிடம் கருத்துகளைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.