ட்ரம்பின் அறிவிப்புக்கு சில மணி நேரங்களில் அதிரடி காட்டிய ரஷ்யா..! மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவும் உக்ரைனும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, உக்ரைனின் ஆறு எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் போர் நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ஆறு எரிசக்தி நிலையங்கள்
எனினும், ரஷ்யா உக்ரைனின் எரிவாயு நிலையங்கள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் ஏனைய முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக செலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் நாடு முழுவதும் 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யத் தாக்குதல்களால் இசியும் நகரில் மின்சாரக் கட்டமைப்புகள் சேதமடைந்து மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மேற்கு உக்ரைனில் உள்ள எரிசக்தி மற்றும் தொடருந்து கட்டமைப்புகளும் இரவு நேரத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

இதற்கிடையில், கார்கிவ், டொனெட்ஸ்க் மற்றும் சபோரிஷியா பகுதிகளில் புதிய மின்வெட்டுகள் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் அரசுக்குச் சொந்தமான மின்சாரக் கட்டமைப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சேதமடைந்த மின்சார உபகரணங்கள் மீது அதிக சுமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, சில பகுதிகளில் மின்சாரப் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், கீவ் நகரின் டார்னிட்ஸ்கி பகுதியில் உள்ள 25 மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் மீது ஆளில்லா விமானம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை
குறித்த கட்டடத்தின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களிலும் தீ பரவியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த செலென்ஸ்கி, ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதற்கு இவை ஆதாரமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கிய பதிலாக இந்தத் தாக்குதல்கள் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மறுபுறம், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், போர் நிறுத்தத்தால் கிடைக்கும் தற்காலிக நிவாரணத்திற்குத் தகுதியான நாடாக உக்ரைன் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக ரஷ்யாவும் உக்ரைனும் ஒன்றையொன்று இலக்குவைத்து எரிசக்திக் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் கட்டமைப்புகள் என்பதால் தாம் தாக்கும் நிலையங்கள் நியாயமான இலக்குகள் என ரஷ்யா கூறுகிறது.
அதேவேளை, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் மீதான உக்ரைனின் தாக்குதல்கள், போருக்கான நிதியைத் திரட்டும் ரஷ்யாவின் திறனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் என செலென்ஸ்கி விளக்கியுள்ளார்.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri