கிண்ணியாவில் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களும் சரீர பிணையில் விடுதலை
திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த ஆறு மீனவர்களையும் சரீர பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று (15) குறித்த மீனவர்களை ஆஜர்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆனது பெட்ரோல் விலையை கண்டித்து இடம்பெற்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களின் காரியாலயத்தில் அவரது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த 6 மீனவர்களையும் தலா 25,000 ரூபாய் வீதம் சரீரப் பிணையில் செல்லுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிட் 19 தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவில் இவ்வாறு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சரீர
பிணையில் விடுவிக்கப்பட்ட 6 மீனவர்களையும் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி
திருகோணமலை நீதிமன்றில் ஆஜராகுமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.