ஆட்சிக்காலத்தில் எந்தவொரு எதிரிகளையும் கொல்லாத ஒரே ஜனாதிபதி சிறிசேன மட்டுமே! சுதந்திரக் கட்சி தெரிவிப்பு
தனது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு எதிரிகளையும் கொல்லாத ஒரே இலங்கை ஜனாதிபதி சிறிசேன மட்டுமே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறையில் அடைக்கப்பட வேண்டுமானால் குண்டு வெடிப்புகளின் உண்மையான சூத்திரதாரிகள் பகிரங்க தூக்கு மேடைக்கு அனுப்பப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது.
அவர் எவரையும் காணாமல் ஆக்கவோ எந்த அமைப்புக்கும் தீ வைக்கவோ இல்லை. ஜனாதிபதியைக் கேலி செய்த எவருக்கும் பதிலடி கொடுக்கவுமில்லை எனவும் அது கூறியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை குண்டர்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் வல்லுறவாளர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவித்தவர் சிறிசேனவே என்றும், பேராசிரியர் விஸ்வ வர்ணபால, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் போன்றவர்களை தலைமைப் பதவிகளுக்கு நியமித்தவர் அவரே என்றும் அந்தக் கட்சி கூறியுள்ளது.