தமிழரசுக் கட்சியென்பது அடக்குமுறையுடன் கூடிய கட்சியல்ல - சுட்டிக்காட்டும் சிறிநேசன்
தமிழரசுக்கட்சியென்பது அடக்குமுறையுடன் கூடிய கட்சியல்ல, ஜனநாயக ரீதியான பண்புமிக்க கட்சி, இந்த கட்சியில் எந்த காலகட்டத்திலும் தந்தை செல்வாவினால் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கொள்கை ரீதியான கட்சியாகவே அது காணப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவரான தந்தை செல்வாவின் 128வது ஜனனதினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொதுச் சிந்தனை
அவர் மேலும் தெரிவிக்கையில், தனிமனித சிந்தனை, தற்போக்குவாத சிந்தனை என்பதைவிட தமிழ் மக்களுக்கான அபிலாசைகளைக் கொண்ட பொதுச் சிந்தனையே தந்தை செல்வாவின் சிந்தனையோடு கொள்கையோது இணைந்து செல்வதற்கான வாய்ப்புகள் இருகின்றது.

இல்லையென்றால் சில விடயங்களில் நாங்கள் மீண்டும் மீண்டும் பின்நோக்கி செல்லக்கூடிய வாய்ப்பிருக்கின்றது. தமிழரசுக்கட்சியென்பது அடக்குமுறையுடன் கூடிய கட்சியல்ல.
ஜனநாயக ரீதியான பண்புமிக்க கட்சி. இந்த கட்சியில் எந்த காலகட்டத்திலும் தந்தை செல்வாவினால் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கொள்கைரீதியான கட்சியாகவே அது காணப்பட்டது.
சமஸ்டி கொள்கையினை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை, கைவிடமாட்டோம். தந்தை செல்வாவின் கொள்கையின் பாதையிலேயே நாங்கள் பயணம் செய்ய வேண்டும். எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இதுவே அடிப்படை கருத்தியலாக காணப்படவேண்டும்.
ஒற்றையாட்சி சிந்தனை

அதனை தனிப்பட்ட முறையில் யாரும் எவரும் கைவிடமுடியாது, அது எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லவும் முடியாது. இன்று பேரினவாத சக்திகள் ஒற்றையாட்சி சிந்தனையுடனேயே இருக்கின்றனர். அதேபோன்று அதிதீவிரமாக தமிழர் சார்பில் சிந்திக்கின்றர்வர்கள் தனிநாட்டு கோரிக்கையில் இருந்தார்கள்.
இந்த இரண்டுக்கும் இடையில் பெறக்கூடிய ஒரேயொரு நடுநிலை தீர்வாக இருப்பது கூட்டாட்சி என்ற முறையாகும். அது தந்தைசெல்வாவினால் வகுக்கப்பட்ட தீர்மானமாகும். அதனால் ஒற்றையாட்சிக்குள் தான் எங்களை கொண்டுசெல்ல முற்படுகின்றார்கள் என்பதற்காக அவர்கள் சொல்லும் விடயங்கள் அனைத்திற்கும் தலையாட்டுவதற்கு எங்களால் முடியாது.
ஒற்றுமையென்பது பேசுவதற்கு நன்றாகயிருக்கும். ஒற்றுமையினைப் பேசிக்கொண்டு உள்ளுக்குள் பகையினை வளர்த்தால் கடைசி வரைக்கும் இந்த ஒற்றுமையென்பது ஏற்பட போவதில்லை. தமிழ் தேசிய கட்சிகள் என்பது உண்மையில் ஒற்றுமைப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

