பாஜக பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய சிறிநாத் எம்.பி
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(27.10.2026) புதுடெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அரசியல் தீர்வு, தற்போதைய அரசியல் சூழல், வடகிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலன் பல்துறை சார் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
தமிழர்களின் தற்போதைய நிலை
மற்றும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாடு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை, அவர்களின் இருப்பை உறுதி செய்தல் மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ம.வெங்கடேசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.

