எட்டு வருட சர்வதேச கிரிக்கட் கனவு: முதல் போட்டியில் களமிறங்கினார் சிராஸ்
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தமிழ் பேசும் வீரர் ஒருவர் பங்குபற்றியமை கிரிக்கட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுவருகிறது.
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டியின் வெற்றியானது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என வர்ணனையாளர்கள் கூறியிருந்தாலும் இலங்கை அணியின் சூழல் பந்து வீச்சானது போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது.
சிறந்த பந்துவீச்சு
இந்த தொடரில் முன்னதாக அறிவிக்கப்பட்ட குழாமில் வேகப்பந்துவீச்சாளர்கள் துஷ்மந்த சமீரா, நுவான் துசாரா மற்றும் பினுரா பெர்னாடோ ஆகிய மூவரும் காயத்தால் வெளியேறியமை இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
மேலும் இதற்கு முன்னர் இடம்பெற்ற டி20 ஆட்டத்தில் மதீஷ பத்திரனவும் காயம் காரணமாக வெளியேறினார்.
இந்நிலையில் உள்ளக ஒருநாள் தொடர்களில் சிறந்த பந்துவீச்சு பிரதியை வெளிப்படுத்திய முகமது சிராஸ் இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.
முதல் தர கிரிக்கெட்
பிஆர்சி அணிக்காக விளையாடும் இவர் குருநாகல் ஒய்சிசி அணிக்கு எதிராக 21 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியமை இவரது சிறந்த பந்துவீசிச்சு பிரதியாகும்.
உள்ளக ஒருநாள் போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஸின் பந்து வீச்சு சராசரி 17.52 என காணப்படுகிறது.
21 வயதில் முதல் தர கிரிக்கெட்டை ஆரம்பித்த சிராஸ் எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
நடப்பு இலங்கை கிரிக்கட் குழாமில் விஜயகாந்த் விஸ்காந்த்துக்கு அடுத்தபடியாக இலங்கை அணிக்குள் இணைந்த தமிழ் பேசும் வீரராக முகமது சிராஸ் காணப்படுகிறார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |