லொட் ரிலீஸ் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் சீனர்களுக்கு வழங்கப்படும் சினோஃபார்ம் தடுப்பூசி
சீனாவின் சினோர்பார்ம் கோவிட் தடுப்பூசிகளை இலங்கையில் உள்ள சீனர்களுக்கு வழங்கும்போது “லொட் ரிலீஸ்” சான்றிதழ்கள் கிடைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லொட் ரிலீஸ் சான்றிதழ்கள் அனைத்து தடுப்பூசிகளுக்கும் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என தெரியவருகிறது.
புத்தளம், கண்டி, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் சீனர்களுக்கே இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சினோர்ப்பாம் தடுப்பூசிகளுக்கு இலங்கையில் அனுமதி வழங்காத தேசிய மருந்தாக்கல் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமையை அடுத்தே இந்த தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
தடுப்பூசிகளுக்கான “லொட் ரிலீஸ்” என்பது உரிமம் பெற்ற உற்பத்தி ஒன்றை சந்தைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னர் பெறப்படவேண்டிய ஒப்புலாகும்.
இது இலங்கையிலும் தேசிய ஆய்வுகூட கட்டுப்பாட்டு மருந்தாக்கல் ஆராய்ச்சி நிறுவகத்தினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற முறையாக அமைந்துள்ளது.
எனினும் சீனாவின் சினோர்பார்ம் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார மையம் இன்னும் அனுமதி வழங்காமை காரணமாகவும் சினோர்பார்ம் தடுப்பூசி இலங்கையில் பதிவுசெய்யப்படாமை காரணமாகவும் இந்த “லொட் ரிலீஸ்” சான்றிதழை வழங்கமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.