அரசியல் அதிகாரத்தை தக்கவைக்க வன்முறையை கட்டவிழ்த்துவிடும் சிங்கள ஆட்சியாளர்கள்
இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கும், அதனை தீர்ப்பதற்கும் இலங்கையை ஆளும் சிங்கள பௌத்த உயர்குழாத்துக்கு ஒரு ஆயுத வன்முறை தேவைப்படுகிறது.
ஆட்சி மாற்றங்களால் அல்லது ஆள் மாற்றத்தினால் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க வைக்க முடியாது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றும் பொருளாதார ரீதியில் எந்த அடைவையும் எட்ட முடியவில்லை என்பது தெரிகிறது.
எனவே ஒரு இரத்தக்களரிதான் இந்த நெருக்கடியில் இருந்து தம்மை மீட்டெடுத்து நிமிர்ந்தவல்ல ஒரேவழியென சிங்கள ஆளும் உயர்குழாம் தெரிவு செய்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்காகவே தற்போது சில நாசகார உத்திகளை ஆட்சியாளர்கள் கையாண்டுள்ளனர்.
தேசிய புரட்சி
அதன் ஒரு பகுதி தான்"மக்களே கொழும்பை நோக்கி அணி திரளுங்கள். நாம் ஒரு தேசிய புரட்சியை செய்யப் போகிறோம். அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற போகிறோம்." என்று கூறும் ஒரு போலியான அறிக்கையை ஜே.வி.பி யின் பெயரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
அடுத்த சில வாரங்களில் ஒரு வன்முறை வெடிக்க வைப்பதற்கான அறிகுறிகள் சிங்கள தேசத்தில் தென்படுகிறது. எனவே இந்த அறிக்கைக்கு பின்னான வன்முறை அரசிலை ஆழமாக நோக்குவது அவசியமானது.
கடந்த ஒரு நூற்றாண்டு கால இலங்கை அரசியல் வரலாற்றை உற்று அவதானித்தால் சிங்கள ஆளும் குழாத்தின் அல்லது அதிகார வர்க்கத்தின் அதிகார வெறிக்காகவும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும், தம்மை அரசியலில் முன்னிறுத்துவதற்காகவும் அவர்கள் இனவாதத்தின் பெயராலும், மதவாதத்தின் பெயராலும் மேற்கொண்ட வன்முறைகளும், படுகொலைகளின் பட்டியல்களும் மிக நீண்டது.
இந்த நீண்ட வரலாற்றுப் போக்கில் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் ஆளும் சிங்கள உயர் குழாத்தின் பிரதான எதிரிகள் என்ற வரிசையில் இந்தியா, இடதுசாரிகள், இந்திய வம்சாவளி மக்கள், சோனகர்கள், முகமதியர், ஈழத்தமிழர்கள் என அந்தத் தரவரிசை அமைந்திருந்தது.
காலத்துக்குக் காலம் இந்தப் பொது எதிரிகளை வீழ்த்துவதற்கு அவர்கள் ஏனைய எதிரிகளை அரவணைப்பதும், கூட்டு சேர்ப்பதும் இதன் மூலம் ஒரு எதிரியை மாத்திரம் தனிமைப்படுத்தி வீழ்த்தி அதன்பின் ஒவ்வொன்றாக தனிமைப்படுத்தி எதிரிகளை வீழ்த்துவதும்தான் வரலாறு.
இதனை இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆழமாக பார்த்தால் புரிந்துகொள்ளமுடியும். அந்த அடிப்படையிற்தான் இன்றைய காலகட்டத்தில் “கோட்டா கோ கோம்“ போராட்டக்காரர்களின் பின்னே இருக்கின்ற ஜேவிபி இனர்தான் இன்றைய நிலையில் சிங்கள ஆளும்குழாத்தின் பிரதான முதன்மை எதிரியாக காட்சியளிக்கிறது.
எனவே இந்த முதன்மை எதிரியை வீழ்த்துவதற்கு ராஜபக்சக்கள் திடசங்கட்பம் பூண்டு விட்டார்கள் என்பதன் அறிவிப்புத்தான் இந்த ஜேவிபியின் பெயரால் வெளியிடப்பட்ட போலியான அறிக்கை. இங்கே ஜேவிபி இனர் சுத்த பூனைகள் அல்ல. அவர்களும் இனவாதிகள்தான்.
ஆனால் இலங்கை சிங்கள ஆளும் அதிகார வர்க்கத்தின் அரசியலைப் பொறுத்தளவில் சிம்மாசனத்தை கைப்பற்றுகின்ற போட்டியாளர்கள்தான் முதன்மை எதிரிகள். தமிழர்களோ, முஸ்லிம்களோ சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தை கைப்பற்ற மாட்டார்கள். ஆனால் ஜேவிபி யினரால் சிங்கள தேசத்தின் சிம்மாசனத்தை கைப்பற்ற முடியும்.
அப்படி அவர்கள் ஆட்சியை, அதிகாரத்தை கைப்பற்றினால் அனைத்து சிங்கள ஆளும் உயர்குழாமும் கருவறுக்கப்பட்டவிடும். எனவே தற்போது அனைத்து ஆளும்குழாமும் ஒன்றிணைந்து முதன்மை எதிரியான ஜேவிபி யை வீழ்த்துவதற்கு முனைகிறார்கள் என்பதுதான் இன்றைய இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் ஆகும்.
சுதந்திரம் அடைந்த காலத்தில் இலங்கையின் இடதுசாரிகள் மிகப் பலம் பெற்றிருந்தார்கள். அன்றைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸும் இடதுசாரி இயக்கத்தை எதிர்த்தது. இதனைப் பயன்படுத்தி 1940 களில் நேருவுடன் சிங்கள உயர்குழாம் நட்புறவு பாராட்டி மலையகத் தமிழரின் குடியுரிமை, வாக்குரிமை என்பனவற்றை பறித்தனர்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின் டி.எஸ்.சேனநாயக்க அகில இலங்கை தமிழ் காங்கிரசை அணைத்துக் கொண்டு இடதுசாரிகளை வீழ்த்துவதற்கு முடிவெடுத்தார். இதற்கு இடதுசாரிகளின் பலமாக அமைத்திருக்கின்ற தொழிற்சங்கங்களை வீழ்த்த வேண்டும்.
தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கன் மலையக தோட்ட தொழிளாலர்களாவர். எனவே அவர்களை வீழ்த்துவதற்கான திட்டத்தை வகுத்தார். அந்த மூலோபாயத்தின் அடிப்படையில் இந்திய பாகிஸ்தானிய குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்து மலையக மக்களை நாடற்றவர்களாக்கினார். அதன் மூலம் தொழிற் சங்கங்களின் முதுகெலும்பை முறித்து இடதுசாரிகளை முடக்கினார்.
பின் நாட்களில் தமிழரசு கட்சி தோன்றி சிங்கள உயர் குழாத்துடன் மோதுகின்ற போது முஸ்லிம்களையும் இடதுசாரிகளையும் அணைத்து தமிழர் போராட்டத்திற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டு இறுதியில் முதலாம் குடியரசு யாப்பை உருவாக்கி பௌத்தத்தையும் சிங்கள மொழியையும் முதன்மைப்படத்திய ஒரு அரசியல் யாப்பை உருவாக்கி காட்டினார்.
அந்த அரசியல் யாப்பை இடவிசாரிகளைக் கொண்டே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வரைந்தும் காட்டினார். இதுவே சிங்கள உயர் குழாத்தின் ராஜதந்திர நகர்வின் உச்சமெனலாம். இதற்குப் பின்னர் ஈழத் தமிழர் ஆயுதப் போராட்டத்தில் முனைப்புக் காட்டி ஆயுதப் போராட்டம் ஒரு உச்சகட்டத்தை அடைந்தபோது சிங்கள தேசத்தின் பிரதான எதிரியாக இருந்த இந்தியாவை அரவணைத்தனர்.
இந்தியாவை அழைத்து வந்து இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்தியாவுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் இருந்த உறவை முறித்து உடைத்தனர். அவர்களை எதிரியாக்கி புலிகள்- இந்திய யுத்தத்தை உருவாக்கி தமது பொதுவான இரண்டு எதிரிகளையும் மோதவிட்டு தமது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
இந்திய- இலங்கை ஒப்பந்த காலத்தில் “அந்நியப் படைகள்“ என்ற கோஷத்துடன் ஜேவிபினர் எழுச்சி பெற்று ஆட்சியை கைப்பற்றும் நிலை வந்தபோது இலங்கை அரசியலில் சிம்மாசனம் ஏறிய பிரேமதாச இன்னும் ஒரு அரசியல் வித்தை செய்து காட்டினார். புலிகளைப் பேச்சுவார்த்தைக்காக அழைத்து இந்தியாவை ஓரம் கட்டி ஈற்றில் இந்திய அமைதிப்படையை இலங்கைவிட்டு வெளியேறும்படி அழுத்தம் கொடுத்து இந்தியாவை வெளியேற்றினார்.
புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு சிம்மாசனப் போட்டியிலே ஈடுபட்ட ஜேவிபினரை கருவறுத்து அதன் தலைவரையும் அழித்து ஒழித்தார். இந்த சிம்மாசனப் போட்டிக்கான வன்முறையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடதுசாரிச் சிங்கள இளைஞர்களை படுகொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.
அவ்வாறே ஜேவிபி யினரை அடக்கி அவர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களை ஒரு நிரந்தர உறங்கு நிலைக்கு இட்டுச் சென்றனர். ஜேவிபினரானருடனான யுத்தம் முடிவடைந்த பின்னர் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை சிங்கள தேசம் ஏவிவிட்டது. இந்த யுத்தம் சிங்கள உயர்குழாம் ஆட்சி கட்டில் ஏறுவதற்காக ஒவ்வொரு ஆட்சியாளர்களும் முன்னே இருந்த ஆட்சியாளர்களைவிட ஒருபடி மேலே சென்று இனவாதம் பேசினர்.
அந்த வரிசையில் பரண் ஜெயத்திலகா, டி எஸ் ஜனநாயக, டட்லி சேநாயக்கா, பண்டாரநாயக்க, ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க, ஜே ஆர் ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாசா, சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால. சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச என இந்த அரசியல் தலைவர்கள் வரிசையில் இவர்கள் இனவாதத்திலும் வன்முறையிலும் ஒவ்வொரு படி அதிகரித்துச் சென்ற ஒரு வளர்ச்சி போக்கையே காணமுடிகிறது.
இந்த வளர்ச்சிப்போக்கு முள்ளிவாய்க்கால் வரை சென்று அதன் உச்சம்தான் முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் வன்முறை அரசியல் இலங்கையில் நடந்திருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் பௌத்த சிங்கள பேரினவாதம் நிறைவுக்கு கொண்டுவந்து விட்டதாக கருதுகிறது.
ஆனால் இந்த முள்ளிவாய்க்கால் வரை சென்று தமிழினப் படுகொலையை நிறைவேற்றுவதற்காக அரவணைக்கப்பட்ட முஸ்லிம் ஜிகாத் மற்றும் முஸ்லிம் ஊர்காவற் படையினரும் , ஜேவிபி , மற்றும் இடதுசாரிகளும் இந்தக் காலத்தில் தங்களை சற்று பலப்படுத்திக் கொண்டனர். இவ்வாறு பலப்பட்ட முஸ்லிம் ஜிகாத் அமைப்பினரையும், அவருடைய ஆயுதங்களையும், ஆயுத தொழிநுட்ப அறிவையும் அழிக்க வேண்டிய தேவை சிங்கள தேசத்திற்கு ஏற்பட்டது.
இத்தகைய முஸ்லிம் அமைப்புக்களை கருவறுக்கவும், அதேநேரம் அதிகாரத்தை இழந்திருந்த ராஜபக்ச அணியினர் இழந்து போன அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கும் தங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட முஸ்லிம் ஜிகாத்துனரை பயன்படுத்தி தமிழ் கிறிஸ்தவர்கள் மீது உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதல் மூலம் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் மோதவிடுவதோடு மாத்திரமல்ல முஸ்லிம்களின் ஆயுதப் பொறிமுறையை இல்லாத ஒழித்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை பௌத்த பேரினவாதத்தின் முன் காட்டி 2020 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள்.
இங்கே இலங்கை அரசியலின் தொடர் வரலாற்றுப் போக்கில் சிங்கள ஆளும் குழாத்தின் ராஜதந்திரமும் அவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எத்தகைய படுகொலைகளையும், இரத்தக்களரிகளையும் ஏற்படுத்துவதில் எந்தவித தயக்கமும் காட்ட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
இன்றைய பெரும் பொருளாதார நெருக்கடிச் சூழலில் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து வைத்திருக்கவும், மக்கள் எழுச்சிகளை கட்டுப்படுத்தவும், அதனை மடைமாற்றவும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு வன்முறை தேவைப்படுகிறது. அந்த வன்முறையை இன்றைய சூழலில் தமிழர்கள் மீது திருப்ப முடியாது.
அப்படிச் செய்தால் அது இன்னும் பெரிய பாதிப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும். அதே நேரத்தில் முஸ்லிம்கள் மீதும் ஒரு வன்முறையை இப்போது கட்டவிழ்த்துவிட முடியாது. ஏனெனில் பொருளாதார, நிதி உதவி பெறுவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஆதரவும் உதவியும் சிங்கள தேசத்திற்கு தேவையாகவே உள்ளது.
இடதுசாரி அரசு
எனவே தமிழர்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் ஒரு வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாத பட்சத்தில் மூன்றாவது தேர்வு சிங்கள இடதுசாரிகள்தான். எனவேதான் சிங்கள இடதுசாரிகள் இப்போது குறிவைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் கள யதார்த்தம். இன்றைய உலகளாவிய சுழலில் ஒரு இடதுசாரி அரசு இலங்கையில் உருவாவதை மேற்குலகமும், இந்தியாவும் விரும்பாது.
தனது வாசல்ப்படியில், அதுவும் தனது கால்மாட்டில் இடதுசாரிகள் பலம் பெறுவதையோ, அல்லது அதிகாரத்துக்கு வருவதையோ, இடதுசாரி அரசாங்கம் உருவாவதையோ இந்தியா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்து சமுத்திர பிராந்தியத்துக்குள் இடதுசாரி நாடு அல்லது இடதுசாரி அரசாங்கம் அமைவதை மேற்குலகமும் விரும்பப்போவதில்லை.
எனவே இந்த அடிப்படையில் இருந்துதான் சிங்கள உயர் குழாத்திற்கான ஒரேயெரு வழியாக ஜேவிபி இடதுசாரிகள் குறிவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு மக்கள் எழுர்ச்சியை மடைமாற்றி ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க சிங்கள ஆளும்குழாம் முனைகிறது என்பதுதான் நிதர்சனமானது.
ஆனால் இங்கே இவ்வாறு ஜேவிபினர் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறை ஈற்றில் மடைமாற்றப்பட்டு தமிழில் பேசும் மக்கள் மீது முடிவடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே தமிழர் தரப்பு தம்மை தற்காத்துக் கொள்வதற்கான அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகளை ஆரம்பிப்பது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. அதனை தமிழ்த் தலைவர்கள் உணர்வார்களா? அடத்துவரும் வாரங்கள் இலங்கை அரசியலில் ஜேவிபினர் அரசியல்தான் சூடு பிடிக்கப்போகிறது.
ஜேவிபியினர் எழுச்சி கொள்கிறார்கள் அல்லது இடதுசாரிகள் எழுச்சி கொள்கிறார்கள் என்ற மாயமான காட்டி இந்தியாவை தங்கள் பக்கம் வளைக்கவும் அதேசம நேரத்தில் மேற்குலகை தங்களின் பக்கம் ஈர்ப்பதற்கும் சிங்கள ஆளும் குழாத்தினர் முனைவார்கள். இவ்வாறு ஜேவிபியின் பெயரால் வெளிவந்த அறிக்கை போலியானது என அக்கட்சியின் தலைவர் அனுரா குமார திசாநாயக்கா பேட்டி அளித்திருக்கிறார்.
எனினும் அவருடைய பேட்டியின் இறுதியில் தாம் மக்களை அணிதிரட்டி கோட்டாபயவின் அரசாங்கத்தை வீழ்த்துவோம் என்று குறிப்பிடத்தவறவில்லை. ஆனால் ஜேவிபியினரால் ஒரு வெற்றிகரமான புரட்சியை இன்றைய சூழலில் செய்ய முடியாது. அவர்கள்2005 ஆண்டு இனவாத இனப்படுகொலை ராஜபக்சர்களுடன் சேர்ந்து 39 நாடளுமன்ற ஆசனங்களை வைத்திருந்த நிலையிலிருந்து தற்போது வெறும் மூன்றே மூன்று நாடாளுமன்ற ஆசனங்கள் என்ற நிலைக்கு வீழ்ந்திருப்பவர்களால் சாதித்துக் காட்ட முடியாது.
அத்தோடு அவர்களுடைய அரசியல் வரலாற்றில் இரண்டு தடவைகள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டு பெரும் தோல்வியை சம்பாதித்தவர்கள். அந்த அடிப்படையில் பார்க்கும் போது ஜேவிபினரால் ஆளும் உயர்குழாத்துடன் கூட்டுச் சேர்ந்து அதிகாரத்தை பங்கிட முடியுமே தவிர அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதுதான் மேலும் கவனத்திற்கு உரிய உண்மையாகும்.
எனவே மொத்தத்தில் ஜேவிபி யின் பெயரால் அரசுக்கு எதிராக வெளியாகியுள்ள வன்முறை பற்றிய காணொளியும், அறிக்கையும் வன்முறையை ஆட்சியாளர் மேற்கொள்ளத் திட்டமிடுகின்றனர் என்பதை உணர்த்துகின்றது. இதற்காக ஆட்சியாளர் திட்டமிட்டு மேற்கொண்ட சதியாக இதனை ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸநாயக்க செவ்வாய்கிழமை நிகழ்த்திய ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.