கலவரம் என்ற போர்வையில் சிங்கள பேரினவாத அரசு இனப்படுகொலையை நடத்தியது - தனுஸ்காந்
38 வருடங்களுக்கு முன்னர் கலவரம் என்ற போர்வையில் சிங்கள பேரினவாத அரசு இனப்படுகொலையை நடத்தியது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினர் ச.தனுஸ்காந் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபை அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ச.தனுஸ்காந் ஜுலை படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகக் கறுப்பு பட்டி அணிந்து இன்றைய சபை அமர்வில் கலந்து கொண்டதுடன், அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைக்கு சுமார் 38 வருடங்களுக்கு முன்னர் சிங்கள பேரினவாத அரசு கலவரம் என்ற போர்வையில் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தி இருந்தது. மாறிமாறி ஆட்சி செய்த சிங்கள பேரினவாத அரசிடமிருந்து இன்று வரை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி கிடைக்கவில்லை.
இது காலம் காலமாகத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிகளுக்கு ஒரு போதும் நீதி கிடைக்காதென்பதையே சுட்டிக்காட்டுகின்றது. ஈழத்தமிழருக்கான படுகொலைக்குச் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை மூலமே தீர்வுகாண முடியும் என்பதைக் காலம் உணர்த்தி நிற்கிறது.
இந்த சபையிலே யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் அதே வேளை, 2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையைக் கோரி அனைவரும் பாடுபட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அத்துடன், வவுனியா சுற்றுலா மையத்தின் பிரச்சனை தொடர்பாகத் திடமான முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையிலும் நகரசபையின் அசமந்தத்தினால் தொடர்ச்சியான செயற்பாடுகள் அங்கே நடைபெறுகின்றது.
இனிமேலும் காலம் கடத்தாமல் தீர்மானத்திற்கு அமைய ஒப்பந்தம் முடிவுறுத்தப்பட வேண்டும். மேலும் பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள நகரசபைக்குச் சொந்தமான காணிப்பரப்பை பிரதேச செயலகம் கோரியுள்ளதாகவும், குருமன்காடு பல்கலைக்கழக வளாக காணியைப் பல்கலைக்கழக சமூகம் கோரியதாகவும் கூறப்பட்டது.
கல்வி நடவடிக்கைக்காக அந்த இடத்தை நகரசபை ஆளுகையின் கீழ் வழங்கலாம். ஆனால் மத்திய அரசின் கீழான திணைக்களங்களுக்குத் தமிழர் தேச நிலப்பரப்புக்களைத் தாரை வார்க்கக்கூடாது. பொலிஸ் நிலைய காணி தொடர்ந்தும் நகரசபையின் கீழ் இருக்க வேண்டும். சில பிரதேசங்களில் குப்பை கொட்டாத வண்ணம் நகரசபை எச்சரக்கைப்பலகை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, உறுப்பினர் ச.தனுஸ்காந் உரையாற்றிய போது சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை இன உறுப்பினர்கள் ஜுலைக் கலவரம் தொடர்பில் கூறப்பட்ட கருத்து தொடர்பில் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், வெளிநடப்புச் செய்யவும் முற்பட்டனர்.
இதன்போது ஏனைய உறுப்பினர்களால் குறித்த குழப்பம் சமரசம் செய்யப்பட்டு சபை அமர்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.