இந்தியப் பயணத்தில் அநுரவை வெற்றி வீரனாக கொண்டாடும் சிங்களம்
இன்றைய உலகம் முற்றிலும் நலன் சார்ந்தது. “பரஸ்பர நலன்கள் சந்திக்கும் சந்திப் புள்ளியிலேயே உறவுகள் மலர்கின்றன“. பரஸ்பர நலன்கள் இல்லாதவிடத்து உறவு என்பது கிடையாது. அது குடும்பங்களாயினும் சரி சமூகங்களாயினும் சரி நாடுகளாயினும் சரி
தமக்கிடையோயான நலன்கள் அடையப்படும் பட்சத்திலேயே உறவுகள் நிலைக்கும், பலப்படுத்தப்படும்.
மாறாக ஒரு தரப்பு நலன்கள் அடையப்படாவிடத்து இறுதியில் அது யுத்தத்தில் கொண்டுவந்த நிறுத்தும். இதுவே கடந்த 4500 ஆண்டுகால மனித நாகரீக வரலாற்றின் முறைமையாக, ஒழுங்காக இந்த பூமியில் நிலைத்திருக்கிறது.
இலங்கை - இந்தியா உறவு
இந்த முறைமைக்கு ஊடாகவே இன்றைய நாடுகள் இயங்குகின்றன.
அது சர்வதேச உறவாயினும் சரி, அண்டை நாட்டு உறவாயினும் சரி, புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் தத்தமது நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதனை முதன்மைப்படுத்தியதாகவே நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கட்டி வளர்க்கப்படுகின்றன.
அதற்கு அடுத்தபடியாகத்தான் தொழில்நுட்பம், பொருளாதார முதலீடு, போக்குவரத்து, பண்பாட்டு உறவுகள் பற்றியதான விடயங்கள் தொடர்பான கூட்டுறவு அமைக்கப்படும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவிலும் இதையே எதிர்பார்க்க முடியும்.
அநுரவின் இந்திய பயணமானது முற்றிலும் சிங்கள ராஜதந்திர வியூகத்திற்குள் இந்திய ராஜதந்திரகளை சுற்றிவளைப்பதையே இலக்காகக் கொண்டிருந்தது.
இலங்கை அடைந்திருக்கும் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுப்பது, தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவது, சக்தி வளங்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல்,பொருளியல், பண்பாட்டியல் உறவை பலப்படுத்துவது என மேல் விழுந்த வழி வாரியாக பார்க்கின்ற போது என்ன தோன்றும்.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட சிங்கள பௌத்த அரசை எவ்வாறு இந்து சமுத்திர பிராந்தியத்தில் வலுவானதாகவும், இந்திய மேலாதிக்க பிடியிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்குமான அடிப்படையை கொண்டிருந்தது என்பதுதான் உண்மையாகும்.
இன்று வரை சிங்கள பௌத்தம் பாதுகாக்கப்படுவது
இலங்கைக்கு இந்தியா வழங்குகின்ற பொருளாதார தொழில்நுட்ப முதலீட்டு உதவிகளை விட பன்மடங்கு அதிகமாக சீனாவினால் இலங்கைக்கு வழங்க முடியும்.
இலங்கையின் அமைவிடம் இந்தியாவிற்கு மிக நெருக்கமாக இருப்பதனால் இந்தியாவின் பாதுகாப்பு வளையத்தினுள் இலங்கை தீவு இருப்பதனாலும், இந்து சமுத்திரத்தில் பலம் பாய்ந்த நாடாக இந்தியா இருப்பதினாலும் இந்தியாவை விரும்பியோ, விரும்பாமலோ அனுசரித்து போவது இலங்கை அரசின் புவிசார் அரசியல் தலைவிதியாக உள்ளது.
இதனாலே தான் இந்தியாவை அது அனுசரிக்க வேண்டியதாக இருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக இலங்கை தீவையும் இந்தியாவையும் பிரிக்கின்ற 137 கி.மீ நீளமான பாக்கு நீரிணையின் இருமUங்கிலும் அதாவது இந்திய கரையில் தமிழகத் தமிழர்களும், இலங்கை கரையில் ஈழத் தமிழர்களும் வாழ்வதனால் இந்த தமிழ் தேசிய இனம் பாக்குநீரிணையினால் பிரிக்கப்பட்டு தீவாக இருப்பது இலங்கை அரசுக்கு பலமானதாக இருக்கிறது.
இன்று வரை சிங்கள பௌத்தம் பாதுகாக்கப்படுவது இலங்கை தீவாக இருப்பதினால்தான். சிங்களவர்களுக்கு பாக்கு நீரிணை என்பது இந்தியாவிடமிருந்து இலங்கையை பாதுகாக்கின்ற பாதுகாப்பு அரண், பாதுகாப்பு அகழி, தடுப்புச் சுவர் ஆக தெரிகிறது.
பாக்கு நீரிணை இல்லையேல் இலங்கையில் பௌத்தம் 10ம் நூற்றாண்டோடு உருத்தெரியாமல் அழிந்திருக்கும். எனவே இலங்கை தீவாக இருப்பதையே பௌத்த மகாசங்கம் விரும்பும்.
இந்த பாக்கு நீரிணை இல்லையேல் இன்று இலங்கை அரசு என்ற ஒன்றோ, அல்லது பௌத்த மதம் என்ற ஒன்றோ இலங்கைத் தீவில் நிச்சயம் இருந்திருக்காது.
ஆகவே பாக்கு நீரிணை என்பது ஒருவகையில் இந்தியாவிற்கு பலவீனமானதாகவும், அதேவேளை இலங்கைக்கு பாக்கு நீரிணையே பலமானதாகவும், இந்திய மேலாண்மையை தடுக்கும் கேடயமாக அமைந்திருக்கிறது.
அதிலிருந்துதான் இலங்கை அரசு இந்தியாவுடன் தன்னை பாதுகாப்பதற்கான ராஜதந்திர வியூகங்களை வகுத்து வளர்த்துக் செயல்படுகிறது.
இந்த அடிப்படையில்த்தான் இலங்கைத் தலைவர்கள் பதவியேற்றவுடன் இந்தியாவுக்கு நமது முதலாவது பயணத்தை மேற்கொள்வர். அதனையே தற்போது அநுரவும் பின்பற்றி இந்தியாவுக்குச் சென்று வந்தார்
பௌத்தம் அழிக்கப்பட்டடு விடும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் தனது பயணத்தை மேற்கொண்ட போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தரைவழி பாதையை உருவாக்க ராமர் பாலத்தை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தார்.
அதனை இந்திய ஊடகங்கள் பெரிய அளவில் வரவேற்றன. இந்துக்களின் மத்தியில் ராமர்பாலம் அமைக்கப்படப் போகின்றது என்ற பொது அபிப்பிராயம் இந்தியாவில் கட்டி எழுப்பப்பட்டிருந்தது.
அதில் ரணில் வெற்றியும் பெற்றிருந்தார். ஆனால் அநுரவின் பயணத்தின் போது கடந்த கால ஒப்பந்தங்கள் அனைத்தையும் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக அல்லது பின்பற்றுவதாக குறிப்பிடப்பட்டாலும் மோடி அரசாங்கத்தின் பெரும் விருப்பமாக இருந்த ராமர் பாலம் பற்றி அநுர எதையுமே பேசவில்லை.
ஒரு ராமர் பாலத்தின் மூலம் இலங்கைக்குள் இந்து பண்பாட்டு படையெடுப்பால் பௌத்தம் அழிக்கப்பட்டடு விடும் என்ற வரலாற்று அச்சமும் அறிவும் வன்மமும் சிங்களவர்களுக்கு உண்டு.
இலங்கையை தீவாக வைத்திருப்பதைத்தான் இலங்கைக்கு பாதுகாப்பு என்ற அடிப்படையில் அந்த பாதுகாப்பு வியூகத்தை உடைக்க அநுர ஒருபொதும் விரும்ப மாட்டார். வெறும் பேச்சுக்கு ஆம் என்று தலையசைப்பாரே தவிர அதனை ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டார்கள்.
எனவே ராமர் பாலமும் தொடக்கப்படும் என்று யாரும் கற்பனை பண்ணக்கூடாது. ராமர் பாலத்தை ஒருபோதும் கட்ட அனுமதிக்கப்பட மாட்டாது.
ஆயினும் இந்திய அரசாங்கம் மிகக் கடுமையாக வற்புறுத்தி இந்த பாலத்திற்கான ஆயத்த வேலை திட்டங்களை ஆரம்பித்து பாலம் கட்டுவதற்கு கட்டட நிர்மாணம் ஆரம்பிக்கின்ற போது சிங்கள ராஜ தந்திரிகள் பௌத்த மகா சங்கம் என்ற பூதத்தை கிளப்பி விடுவார்கள்.
சிங்கள சமூக ஆழ்மன விருப்பு மனப்பாங்கு
பௌத்த மகா சங்கம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இருக்கும், பாதயாத்திரை செல்லும் உடனே இலங்கை அரசுத் தலைவர் இந்தியாவுக்கு ஓடோடி சென்று நாட்டுக்கு ஆபத்து, அரசாங்கத்துக்கு ஆபத்து காப்பாற்றுங்கள் என்பார்.
ராமர் பாலத்துக்கு ஆயுள் அவ்வளவுதான். தேசிய மக்கள் சக்திக்கு சிங்கள மக்கள் வாக்களித்தமை என்பது ஜேவிபி யினர் பெரும் புரட்சியாளர்கள், இலங்கைத் தீவை சொர்க்க பூமியாக மாற்றுவார்கள் என்றுதான் மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது என்ன தோன்றும்.
ஆனால் சிங்கள மக்கள் தெளிவாக இனவாதிகளுக்கு வாக்களித்தார்கள் என்பதுதான் உண்மையாகும். அதுவும் மாறி வரும் உலகில் பாரம்பரியமான வயது முதிர்ந்த சிங்கள தலைவர்களை விட இப்போது இளம் சிங்கங்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறது.
தீவிர இந்தி எதிர்ப்பாளர்களாக, தமிழின எதிர்ப்பாளராக ஜேவிபியின் வரலாறு முழுவதும் செயற்பட்டு இருக்கிறார்கள். ஆகவே தெளிவான தமிழின எதிர்ப்பு, இந்திய எதிர்ப்புச் சிங்களச் சிங்கங்களுக்கு சிங்கள மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுதான் சிங்கள சமூக ஆழ்மன விருப்பு மனப்பாங்காகும். சிங்கள மக்கள் ஏதோ ஊழல் ஒழிப்பு, சிஸ்டம் சேஞ்ச் நடக்கப் போகின்றது என்று வாக்களித்திருக்கிறார்கள் என்பது வெறும் மாயத் தோற்றப்பாடேயாகும்.
இந்த ஜேவிபி இளம் சிங்கங்களினால் கவர்ச்சிகரமாக அரசியல் பிரசாரங்களையும், கருத்துருவாக்கங்களையும் ஏற்படுத்த முடியுமே தவிர நடைமுறையில் இவர்களால் இலங்கையின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீட்க முடியாது.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படை காரணம் இலங்கை தீவில் ஈழத் தமிழர்களை இனவழிப்பு செய்வதற்காக தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களும், இனவழிப்பு யுத்தமும்தான் இலங்கையின் பொருளாதாரத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.
இதனை சிங்கள புத்திஜீவிகள் புரிந்தும் அதனை வெளிப்படுத்தாது இருட்டடிப்பு செய்கின்றனர். அதே நேரத்தில் இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு ஏதோ ராஜபக்ச குடும்பம் இலங்கையின் பொருளாதாரத்தை சுரண்டி சிங்கள மக்களில் வயிற்றில் அடித்து விட்டார்கள் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியும் விட்டார்கள்.
பெருந்தொகை இந்துக்கள் இலங்கைக்கு வரவழைப்பு
சிங்கள ராஜதந்திர வட்டாரம் இங்கே மிகச் சிறப்பாக தொழில்பட்டிருக்கிறது. யுத்த வெற்றியாளர்களை தொடர்ந்து பதவியில் வைத்திருந்தால் அது யுத்தத்தின் பின்னான பின் விளைவுகளில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியாது, அதனால் நாட்டுக்கு கேடு ஏற்படும்.
"வெற்றி பெற்ற மன்னன் சொற்கேளான்" ஆகவே அவர்கள் அகற்றப்பட வேண்டியது தவிர்க்க முடியாத அரசியல் ராஜரீக நிர்பந்தமாகும்.
எனவே இந்த மாற்றங்கள் சிங்கள ராஜதந்திர தொடர் நடைமுறைகளுக்கு உள்ளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதுவே உண்மையாகும். எனவே அநுர அரசாங்கமும் ஈழத் தமிழர் பிரச்சினையை ஒருபோதும் தீர்க்கப் போவதில்லை.அது பற்றி பேசப்போவதுமில்லை.
உல்லாச பிரயாண துறையை விருத்தி செய்யப்போவதாக இந்தியாவுடன் ஒரு கூட்டுறவுக்கு செல்லப் போவதாக அநுர அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம் ராமர் பாலத்தை விடுத்து சீதா எலியாவை பார்ப்பதற்கு பெருந்தொகை இந்துக்களை இலங்கைக்கு வரவைப்பதன் மூலம் பெருமளவு இந்திய ரூபாய் அந்நிய செலாவணியை இலங்கையினால் பெற்றுக் கொள்ள முடியும்.
திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சீதாலிய இந்து கோவில் கடந்த 25 வருடங்களில் பிரம்மாண்ட வளர்ச்சியை பெற்றிருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்னர் சன சஞ்சாரம் இல்லாத சீதாலிய பகுதி இப்போது வட இந்திய மக்களால் நிரம்பி வழிவதை கண்கூடாக பார்க்க முடியும்.
இது சிங்கள ராஜதந்திர பிரசார யுக்திகளின் வெற்றிதான். ஆனாலும் இந்த உல்லாசத்துறை வளர்ச்சி என்பது இன்னொரு கட்டத்தை நோக்கி நகரும்.
பௌத்த கலாசாரத்தில் பாலியல் நடத்தைகள் திறந்ததாக உள்ளது. அதற்கான அடிப்படை மெய்யியலை பௌத்த கோட்பாடு கொண்டுள்ளது.
இந்த வகையில்தான் தாய்லாந்தில் திறந்த பாலியல் இன்று நடைமுறையில் இருக்கிறது. கம்போடியா, வியட்நாம், லாவோஸ் போன்ற தென்கிழக்காசிய பௌத்த நாடுகளில் பாலியல் திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம்.
யுத்தத்தால் சீரழிந்து போயிருக்கும் ஈழத்தமிழ் சமூகம்
ஆனால் தென்னாசிய நாடுகளில் இத்தகைய நிலைமையில்லை. தென்னாசிய நாடுகளை பொறுத்தளவில் எங்கே வாழ்கின்ற இந்த இஸ்லாமிய மக்கள் ஒரு பண்பாட்டுச் சமூகமாக வாழ்கின்றனர்.
இந்த பண்பாட்டுச் சமூகங்களின் பண்பாட்டை இத்தகைய திறந்த உல்லாச பயணத்துறை அழித்துவிடும்.
இலங்கையில் இத்தகைய நிலை தோன்றுகின்ற போது அது ஈழத் தமிழர்களையும் வெகுவாக பாதிக்கும்.
ஏற்கனவே யுத்தத்தால் சீரழிந்து போயிருக்கும் ஈழத்தமிழ் சமூகத்தின் பண்பாடு இப்போது கேள்விக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் திறந்த உல்லாச பயணத்துறை விருத்தியாகும் போது போரினால் சீரழிந்து கிடக்கும் ஒரு சமூகம் மேலும் பண்பாட்டு சீரழிவை சந்தித்து அது தன் அடையாளத்தை இழக்கும்.
ஒரு இனத்தை இன ஒழிப்புச் செய்ய வேண்டுமாக இருந்தால் அதனுடைய பண்பாட்டை அழித்து விட்டால் அந்த இனம் தானே அழிந்து விடும். என்பதற்கு இணங்க இலங்கையின் உல்லாச பயண துறையின் விருத்தி நிச்சயமாக தமிழ் மக்களின் பண்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
அதனையே சிங்கள ராஜதந்திரிகள் பெரிதும் விரும்புகின்றனர். எப்படிப்பட்டாவது இலங்கை தீவுகள் தமிழினத்தை அழித்து விடுவதை அவர்களுடைய இலக்கு. அதற்காக அவர்கள் யாருடனும் கூட்டுச்சேர தயாராக இருக்கிறார்கள்.
இதைத்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா "தமிழ் பயங்கரவாதிகளை அழிக்க நான் எந்த எந்த பேயுடனும் பிசாசுடனும் கூட்டு சேர தயார்" என்றார் இது இன்றைய அநுரவிற்கும் பொருந்தும்.
தமிழினத்தை அழித்தொழிப்பதற்கு அவர்கள் எந்த எல்லைவரையும் செல்லவும் தயாராகவே உள்ளார்கள்.
கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோத விட்டு தாங்கள் செய்ய வேண்டியதை இரு தரப்பினரின் முரண்பாடுகளுக்குள்ளும் அடைந்து கொண்டார்கள். இப்போது ஈழத் தமிழர்கள்- மலையகத் தமிழர்கள்- தமிழக தமிழர்கள் முத்தரப்பினரையும் ஒரு கோட்டில் நிறுத்தி அவர்களுக்கு இடையே முரண்பாடுகளை வளர்க்கவும், மோதல்களை ஏற்படுத்துவதற்கான வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டன.
தமிழகத்தையும் ஈழத் தமிழர்களையும் இணைக்கும் தொடுகடல்
முதலாவதாக இம்முத்தரப்பையும் மோத விடுவதற்கான தந்துரோபாயமாக கடற்தொழில் அமைச்சராக மலையக வம்சாவளியைச் சார்ந்த ரா.சந்திரசேகரன் அவர்களை நியமித்தமையை பார்க்க வேண்டும்.
ஏற்கனவே இலங்கையின் வடமாகாண கடற்தொழில் தொழிலாளர்களுக்கும் தமிழக மீன்பிடி தொழிலாளர்களுக்கும் இடையில் எல்லை தாண்டிய கடற்தொழில் சார்ந்த பிரச்சpனையை தீர்க்கப்படாமல் கடந்த 15 ஆண்டுகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இங்கே இரண்டு தரப்பையும் ஒரு மேசையில் அமர்த்தி சுமூகமான ஒரு தீர்வுக்கு சென்று இருக்க முடியும். ஆனால் அதனை இலங்கை அரசு விரும்பவில்லை.
பாக்கு நீரிணையின் இரண்டு கரையிலுள்ள தமிழர்களை தொடர்ந்து மோத விடுவதையே இலங்கை அரசு விரும்புகிறது. அவ்வாறு மோத விடுவதன் மூலமே பாக்கு நீரிணையை இலங்கை அரசை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு சுவராக தொடர்ந்து தக்க வைக்க முடியும் என நம்புகிறது.
மாறாக இந்த இரண்டு தரப்பும் ஒற்றுமைப்பட்டு விட்டால் பாக்கு நீரிணை என்பது தமிழர்களுக்கு நீச்சல் தடாகமாக மாறி தமிழக தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் இணைக்கும் தொடுகடலாக, தொடுபாலமாகிவிடும் என்பதனாலேயே இந்த இரு தரப்பையும் தொடர்ந்து மோத வைப்பதை இலங்கை அரசு விரும்புகிறது.
இப்போது மூன்றாவதாக மலையகத் தமிழர்களின் பிரதிநிதி ஒருவரை கொண்டுவந்து கடற்தொழில் அமைச்சராக்கியதன் மூலம் மலையகத் தமிழர்களையும் இந்த மோதலக்குள் சிக்க வைக்க சிங்கள பௌத்த ராஜதந்திரம் புத்தி சாதிரித்துடன் செயல்படுகிறது.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு தேயிலை தோட்டங்களில் குடியேற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று மலையகத் தமிழர்கள் என்ற பரிமாணத்தைப் பெற்று சிங்கள ராஜதந்திரத்தின் கழுத்தறுப்புகளில் அகப்பட்டு சிதைவுகளைச் சந்தித்தாலும் தற்போது அவர்கள் ஒரு அரசியல் சக்தியாக மேல் எழுந்திருக்கிறார்கள்.
அவர்கள் மலையகத்தில் சிங்கள மக்களினால் சூழப்பட்ட நில பூட்டு வளையத்துக்குள்ளேயே வாழ்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களை இலகுவாக முடக்க சிங்கள தேசத்தால் முடியும்.
ஈழத் தமிழர்களை ஏமாற்றுவதற்கான ராஜதந்திர வலை
ஆயினும் அவர்களுக்கு இருக்கின்ற இந்திய தொடர்புகளை பயன்படுத்தி ஊடாக மூன்று பிரிவுகளாக இருக்கின்ற தமிழர்களையும் மோதவிட்டு இலங்கை தீவில் ஒரு பலமற்ற சக்தியாக தமிழர்களை மாற்றுவதையே இலக்கமாகக் கொண்டுள்ளனர்.
பதவியேற்றிருக்கும் கடற்தொழில் அமைச்சர் பாக்கு நீரிணை சார்ந்த எந்த ஒரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கான எந்த ஒரு தீர்வையும் நடைமுறைப்படுத்த முடியாதவாறு சிங்கள அரசு தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்யும்.
இது முத்தரப்பு தமிழர்களையும் படுகுழி நோக்கி கொண்டு செல்லும் ஒரு சதிகார சக்கரமாகவே தொழிற்படும் என்பதை இப்போதே கணித்துக் கொள்ள முடியும்.
ஆகவே இலங்கை ஜனாதிபதி அநுரவின் இந்தியப் பயணம் கடந்தகால இலங்கை அரசின் கொள்கையிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லை என்பதையே பறை சாற்றுகிறது.
இந்தப் பயணத்தில் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் அவர் முன்வைக்கவில்லை. மாறாக "இலங்கை மக்கள்" என்று குறிப்பிடுவதன் மூலம் தமிழின அழிப்பையே அதாவது தமிழினத்தை சிங்களமயப்படுத்துவதையே இலக்காகக் கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆக ஒட்டுமொத்தத்தில் அநுரவின் இந்திய பயணம் அழகான, கவர்ச்சிகரமான புளுகு மூட்டைகளையும், பொய்யான வாக்குறுதிகளையும் சுமந்து டெல்லியில் கொட்டி விட்டுள்ளார். அதேநேரம் திரும்பி வருகையில் இலங்கைக்கான பொருளாதார, தொழில்நுட்ப, முதலீட்டு உதவிகளை காவிக் கொண்டு வந்துள்ளார்.
ஆக மொத்தத்தில் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்திய தலைவர்களையும், இந்திய ராஜதந்திரங்களையும், ஈழத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்கான ராஜதந்திர வலையை விரித்துவிட்டு வந்துள்ளார் என்று சொல்வதே பொருந்தும்.
இந்திய ராஜதந்திரிகளினாலோ, ஈழத் தமிழர்களாலோ இலகுவில் சிங்கள ராஜதந்திரத்தை வெற்றி கொள்ள முடியாது. அதற்கான ராஜதந்திர தொழில் நுணுக்க அனுபவமோ, திடசங்கர்ப்பமோ, மதி நுட்பமோ, அல்லது இவற்றை புரிந்து கொள்ளக் கூடிய நுண்மான் நுழைபுலனோ, அல்லது அதனை வளர்க்கக்கூடிய மனவிருப்போ, மனநிலையோ, கற்றுக்கொள்வதற்கான முயற்சியோ இந்திய தரப்பிலும் சரி, ஈழத் தமிழர் தரப்பிலும் சரி இப்போதைக்கு இல்லவேயில்லை என்றே சொல்லலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 28 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.