கோட்டாபயவை கைதுசெய்யுமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்த சிங்கப்பூர்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் சட்டமா அதிபர் லூசியன் வான் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூர் சட்டப்படி கோட்டாபய ராஜபக்ச எந்த குற்றமும் செய்யவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ராஜபக்ச மீது இலங்கை அரசாங்கமும், இன்டர்போல் அமைப்பும் எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை.
எவ்வாறாயினும், 63 பக்கங்கள் கொண்ட முறைப்பாட்டை முன்வைத்து, யஸ்மின் சுகா சிங்கப்பூர் சட்டமா அதிபர் முறைப்பாடு செய்திருந்தார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனும் அந்தச் சட்டத்தினால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் Reformகட்சியின் தலைவர் கென்னத் ஜெயரட்னமும் முன்னாள் ஜனாதிபதி தனது உறவினர்களைக் கொன்றதாக சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு முறைப்பாடு அனுப்பியிருந்த போதிலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதிப்படுத்தவில்லை எனவும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.