யானைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு
இலங்கையின் யானைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, மதிப்பிடப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 7451 ஆக உயர்ந்துள்ளது.
புதிய தரவுகள் கடந்த கால தேசிய கணக்கெடுப்புகளுடன் ஒப்பிடுகையில் நிலையான மேல்நோக்கிய போக்கை காட்டுகின்றன.
யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
அதன்படி, 1993 இல் குறைந்தபட்சம் 1,967 யானைகளும், 2011 இல் 5,879 யானைகளும் பதிவாகியிருந்தன. 2021 மற்றும் 2024க்கு இடையில் மாத்திரம், யானைகளின் எண்ணிக்கை 1,572 ஆக அதிகரித்துள்ளது. இது அண்மைய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.
தந்தங்கள் உள்ள யானைகளான இளம் தந்தயானைகளின் சதவீதம், 2011 இல் 8.4 சதவீதமாகவும், 1993 இல் 11.0 சதவீதமாகவும் இருந்த நிலையில், 2024 இல் 17.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2021-2024 காலப்பகுதியில் 9.2 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.

இனப்பெருக்க வெற்றி மற்றும் உயிர்வாழும் வீதங்களில் முன்னேற்றங்களை இது பரிந்துரைக்கிறது. ஒட்டுமொத்த யானை தொகையில் மொத்த தந்தயானைகளின் விகிதம் 2024 இல் 6.5 சதவீதமாக உள்ளது. இது 2011 இல் பதிவான 6.0 சதவீதத்தை விட சற்று அதிகமாக இருந்தாலும், 1993 இல் பதிவான 11.5 சதவீதத்தை விட இன்னும் குறைவாகவே உள்ளது.
மொத்த தந்தயானைகள்
எவ்வாறாயினும், 2021 மற்றும் 2024 க்கு இடையில் மொத்த தந்தயானைகளின் எண்ணிக்கையில் 0.5 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது.
வனவிலங்குப் பாதுகாப்புடன் கிராமிய அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு கவலைகளுக்கு இடையே சமநிலையை நிலைநாட்ட இலங்கை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சமீபத்திய தரவுகள் எதிர்கால பாதுகாப்பு திட்டமிடல், வாழ்விட முகாமைத்துவம் மற்றும் மனித-யானை மோதலைத் தணிக்கும் மூலோபாயங்களுக்கு ஆதரவளிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |