பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி அம்பாறையில் நாளை கையெழுத்து வேட்டை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தின் ஓரங்கமாக நாளைய தினம் அம்பாறை மாவட்டத்தில் கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளது.
நாளை காலை 9 மணியளவில் காரைதீவு பொதுச்சந்தைக்கு முன்னால் கையெழுத்து வேட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில் தலைமையில் ஆரம்பமாகின்றது.
நண்பகல் 12 மணியளவில் கல்முனை பிரதான பேருந்து நிலையத்துக்கு அருகில் இது நடைபெறவுள்ளதுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.
"உங்கள் ஒவ்வொருவரினதும் கையொப்பங்களும் உங்கள் பாதுகாப்புக்கானதும், உங்கள்
சந்ததியின் பாதுகாப்புக்கானதும் ஆகும். எனவே, இந்தக் கையெழுத்துப்
போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம்" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில்
தெரிவித்துள்ளார்.



