யாழ்ப்பாணம் ஊரெழுவில் கசிப்பு கோட்டை முற்றுகை
யாழ்ப்பாணம் - ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகை ஒன்று இளைஞர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (20.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் தப்பி சென்ற நிலையில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களும் ஒரு தொகுதி கசிப்பும் இளைஞர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
கோப்பாய் பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் அண்மையில் ஊரெழு கிராமத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்பு குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் சின்னத்துரை முகுந்தன் தலைமையிலான குழுவினர்கள் இன்று ஊரெழு கிராமத்தில் அதிரடியாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கைவிடப்பட்ட தோட்டம் ஒன்றில் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களும் தென்னைமரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கசிப்பும் சிவில் பாதுகாப்பு குழுவால் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கோப்பாய் பொலிஸார் வரவழைக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்திப்பொருட்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன.
மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |