அரசாங்கத்திற்கு சபையில் சிறீதரன் கடும் எச்சரிக்கை (video)
தமிழ்மக்களின் குடிப்பரம்பலை அடியோடு அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதை சிங்கள இனவாத அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (09.05.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அதிகாரக் கரங்களினால் வலிந்து பறித்தெடுத்து, அந்நிலங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.
சிங்களக் குடியேற்றம்
இராணுவ முகாம்களை கட்டமைத்தல், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குதல், சீனா உள்ளிட்ட நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக அவற்றை வழங்குதல் என்பவற்றின் ஊடாக, தமிழ்மக்களின் குடிப்பரம்பலை அடியோடு அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் சைவ ஆலையங்கள் அழிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுள்ளதாகவும் அதனை திகதி வாரியாக ஆவணப்படுத்தி இன்று சபையில் சி.சிறீதரன் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



