விசா வழங்காத அதிகாரி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! உயிர் தப்பிய மனைவி - பிள்ளைகள்
மாத்தளை, கணேமுல்ல பகுதியில் விசா செயலாக்க அதிகாரியின் வீட்டின் மீது இரண்டு பாதாள உலக துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
டுபாயில் மறைந்திருக்கும் 2 பாதாள உலகத் தலைவர்களுக்கு விசா வழங்க மறுத்ததன் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
டுபாயில் மறைந்திருப்பதாக கூறப்படும் 2 பாதாள உலகத் தலைவர்களான மிதிகம லொக்கா மற்றும் இசுரு ஆகியோருக்கு விசாக்கள் வழங்கப்படாததால் கோபமடைந்த கும்பல், துப்பாக்கி சூடு நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
விசா செயலாக்க அதிகாரியும் டுபாய் சென்றிருந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், அவரது மனைவி மற்றும் பிள்ளை மாத்திரமே கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தனர்.
விசா செயலாக்க அதிகாரி இந்த 2 பாதாள உலகத் தலைவர்களுக்கும் டுபாயில் தங்க விசா வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும் அதற்கான பணத்தையும் பெற்றார். ஆனால் இறுதியில், அவரால் அவர்களுக்கு விசா வழங்க முடியவில்லை.
இதனால் கோபமடைந்த பாதாள உலக உறுப்பினர்கள் அவரை தொலைபேசியில் அழைத்து, இலங்கையில் அவரது மனைவி மற்றும் பிள்ளையையும் கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
அந்த மிரட்டல்களை தொடர்ந்து, 11 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிதாரிகள் கணேமுல்லையில் உள்ள வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.