மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையின் குறைகளை பார்வையிட்ட ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர்!
யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான வேந்தன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளை பார்வையிட்ட போது, வைத்தியசாலை வளாகம் அதிகளவு நீர் தேங்கி நிற்பதாகவும் அதனால் வைத்தியசாலை சமூகம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாக கூறப்பட்டுள்ளது.
தேவைகள் தொடர்பாக அறிக்கை
இதனை தொடர்ந்து, உடனடியாக அறக்கட்டளை ஒன்றின் உதவியுடன் நீர் தேங்கி நிற்கும் இடங்களை மண் பரப்புவதற்காக ரூபா 60000 கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வைத்தியசாலைக்கு தற்போது தேவையான, தேவைகள் தொடர்பாக அறிக்கை ஒன்று பெறப்பட்டு அதனை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பருத்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பல குறைபாடுகளை கொண்டதாக இருந்த போதும் கடந்த சில நாட்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீபன் வருகை தந்து குறைகளை பார்வையிட்டு சென்று அதனை நிவர்த்தி செய்து தருவதாக கூறி சென்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

