மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு; உயிராபத்தை எதிர்நோக்கும் நோயாளிகள்
இலங்கையில் பாரியளவில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் நோயாளிகள் உயிராபத்தை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சத்திர சிகிச்சைகளின் போது பொதுவாக பயன்படுத்தும் மயக்க மருந்து வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்துகளுக்கான பற்றாக்குறை
சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 வீதத்தினால் உயர்வு |
சத்திர சிகிச்சை கருவிகள், வலி நிவாரணிகள், புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து வகைகள், தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சிறுவர்களுக்கான மருந்துப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை நீடித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பே சீர்குலைந்து போகும் அபாயம் உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மருந்தகங்களில் மருந்துப் பொருட்களின் விலைகள் நான்கு மடங்காக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் சத்திர சிகிச்சை கருவிகள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
சத்திரசிகிச்சைகள் ஒத்திவைப்பு
சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தேவையான இரசாயனங்கள் இல்லாத காரணத்தினால் சத்திரசிகிச்சைகளை ஒத்திவைக்க நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நோயாளிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.