நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
பண்டிகைக் காலத்தில் சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, குறித்த வகை அரிசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாக மரதகஹமுல அரிசி வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரிசி பற்றாக்குறை
2024/25 ஆம் ஆண்டு பெரும்போக பருவத்தில், இரு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெல் பயிர்களை அழித்துள்ளதாகவும், இது அரிசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி பற்றாக்குறையை சமாளிக்க, அடுத்த பருவத்தில் குறைந்தது 7 இலட்சம் ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடல் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனுராத தென்னகோன் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தினசரி அரிசி தேவையானது 6,500 மெட்ரிக் தொன் என்பதுடன், ஆண்டுதோறும் 23,57,950 மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கவுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
