“சமையல் எரிவாயு இல்லை என்பதால், இன்று பிரைட் ரைஷ் இல்லை”:அரசியல்வாதி வெளியிட்டுள்ள புகைப்படம்
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சந்தையில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதேவேளை கடந்த வெள்ளிக் கிழமை முதல் எரிவாயு விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தகவல்கள் கூறுகின்றன. இதனடிப்படையில், உடல்களை தகனம் செய்யும் இடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பெரிய ஹொட்டல்களுக்கான எரிவாயு விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.
எரிவாயுவை ஏற்றிய கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. டொலர் நெருக்கடி காரணமாக இலங்கையின் வர்த்தக வங்கிகள் கடன் பத்திரங்களை வழங்காமையே பிரச்சினைக்கு காரணம் என லிட்ரோ எரிவாயு நிறுத்தின் தகவல்கள் கூறுகின்றன.
சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு எரிவாயு கிடைக்காது போனால், 75 வீதமாக வெதுப்பகங்களை முட வேண்டிய நிலைமை ஏற்படும் என வெதுப்பகங்கள் மற்றும் இனிப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாணுமாறு கோரி நேற்றும் இன்றும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதேவேளை “சமையல் எரிவாயு இல்லை என்பதால், இன்று பிரைட் ரைஷ் இல்லை” என்ற அறிவிப்பை உணவகம் ஒன்று காட்சிப்படுத்தியுள்ளதை தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
