கொட்டாவைத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
கடந்த 21.06.2023 ஆம் திகதி கொட்டாவ நகருக்கு அருகில் அமைந்துள்ள மருத்துவ ஆய்வு கூடத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் தவறான இலக்கு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 15ஆம் திகதி பொரளை சிறிசர தோட்ட வீட்டுத் தொகுதியில் கூரிய ஆயுதங்களால் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த துப்பாக்கி சூட்டில், மத்தேகொட நாமல் உயனவில் வசிக்கும் 33 வயதான மிஹிரன் பத்மசிறி என்ற ஆய்வக ஊழியரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் சிறிசர தோட்ட வீட்டுத் தொகுதியில் கொல்லப்பட்ட நபரின் தரப்பினர் அந்த கொலையில் தொடர்புடைய ஒருவரின் சகோதரனை கொலை செய்ய குறித்த ஆய்வு கூடத்திற்கு தேடி வந்துள்ளனர்.
இதன்போது உயிரிழந்த நபரும் துப்பாக்கிதாரிகள் தேடி வந்த நபரும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதே இதற்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கணேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக உறுப்பினரே இந்த துப்பாக்கிச் சூட்டைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |