மினியாபோலிஸில் கூட்டாட்சி படைகளால் கொல்லப்பட்ட நபர்.. அமெரிக்காவில் பதற்றம்
மினியாபோலிஸில் 37 வயதான செவிலியர் அலெக்ஸ் ப்ரெட்டி கூட்டாட்சி படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், அலெக்ஸ் ப்ரெட்டி சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து ஆதாரங்களையும் சிதைக்காமல் பாதுகாக்குமாறு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க பெடரல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாநில அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்ல பெடரல் ஏஜெண்டுகள் தடை விதித்ததைத் தொடர்ந்து, மாநில அரசு இந்த சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.
விமர்சிக்கும் ட்ரம்ப்
அலெக்ஸ் துப்பாக்கியுடன் படைகளை தாக்க முயன்றதாக பெடரல் தரப்பு கூறுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் அவரை ஒரு பயங்கரவாதி என்று விமர்சித்துள்ளார்.

எனினும், வெளியாகியுள்ள வீடியோக்களில், அலெக்ஸ் தனது செல்போனில் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது படையினரால் தாக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்ட நிலையில் சுடப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் ஆளுநர் டிம் வால்ஸ், இது அமெரிக்காவிற்கு ஒரு முக்கியமான திருப்புமுனை என கூறியுள்ளதுடன், தனது மாநிலத்திலிருந்து பெடரல் படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு மாறாக, மாநில சிறைகளில் உள்ள குற்றவாளிகளை நாடு கடத்துவதற்காக ஒப்படைக்க வேண்டும் என ட்ரம்ப் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்தச் சம்பவம் மினியாபோலிஸில் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.