அமெரிக்காவில் பாலர் பாடசாலையில் துப்பாக்கி சூடு - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் எனவும், சந்தேகநபர் 17 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொலைசெய்துள்ளதாகவும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் பாலர் பாடசாலையில் துப்பாக்கி சூடு - இருவர் பலி, பலர் படுகாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் தொடக்கப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், 14 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தடுப்புக் காவலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சான் அன்டோனியோவிற்கு மேற்கே சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உவால்டேவில் உள்ள ராப் எலிமெண்டரி பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பலர் தீவிர நிலையில் இருப்பதாகவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு குறித்த எந்த விவரங்களையும் அதிகாரிகள் உடனடியாக வழங்கவில்லை.
இந்த சம்பவத்தை அடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பாடசாலை மற்றும் பாடசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.