இலங்கையில் சினிமா பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 7 வருடங்களின் பின் பழிவாங்கிய இளைஞன்
அம்பாந்தோட்டையில் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதை கண்ணெதிரே பார்த்த 12 வயது சிறுவன் தனது தந்தையை சுட்டுக் கொன்ற கொலையாளியை 7 வருடங்களின் பின்னர் கொலை செய்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளததாக தெரியவந்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி அம்பாந்தோட்டை சூச்சி கிராம வீதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றிரவு 9.50 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த கொடிதுவாக்குகே சாகர என்ற 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
இரண்டு கொலைகள் உட்பட பல குற்றங்களில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாந்தோட்டை, சுச்சி கிராமத்தில் உள்ள தேவாலய வீதியில், தனது மனைவி மற்றும் 4 வயது பிள்ளையுடன் உயிரிழந்த நபர் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீதியின் குறுக்கே உள்ள வீதித் தடையைக் கடந்து செல்ல தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் குறைத்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, கொலையாளி தப்பி ஓடியுள்ளார்.
கொலையாளியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி 19 வயதுடைய இளைஞன் ஒருவர் இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
சாமோத் நிம்சரய என்ற இளைஞன் சாகர கொடிதுக்குயாவை தானே கடந்த 21ம் திகதி இரவு கொலை செய்ததாக கூறியுள்ளார்.
அம்பாந்தோட்டை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். பின்னர் சந்தேக நபரின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆரம்பித்தார்.
என் தந்தையை சுட்டுக் கொன்றான்
நீண்ட வாக்குமூலத்துக்கு இடையே அந்த இளைஞர் அதிர்ச்சிகரமான கதை ஒன்றை கூறியுள்ளார்.
“சார், 2016 ஆம் ஆண்டு எனக்கு 12 வயது. நானும் என் தந்தையும் மாட்டு கொட்டகைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்த அயோக்கியன் என் கண்ணெதிரே என் தந்தையை சுட்டுக் கொன்றான். 12 வயதில் நான் என்ன செய்வேன்? இந்த குற்றத்திற்கு எப்போதாவது பழிவாங்குவேன் என்று நினைத்தேன்.
7 வருடங்களின் பின்னர் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. என் கண்முன்னே என் தந்தையைக் கொன்றவனை சுட்டுக் கொன்றேன்” என கூறியுள்ளார்.
வாக்குமூலங்களைப் பதிவு செய்த அம்பாந்தோட்டை பொலிஸார் 19 வயதுடைய சந்தேக நபரை நேற்று முன்தினம் மாலை ம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாந்தோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |