விரைவில் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படப் போகின்றாரா.. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது ஏன்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாம். கைது செய்யப்படப் போவதை அறிந்தால் அனைவருக்கும் நோய் வந்து விடுகின்றது என்று பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சட்டம் அனைவருக்கும் சமம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைக்குச் செல்லும் நேரம் நெருங்கும் போதுதான் வைத்தியசாலைக்குச் செல்ல முயற்சி செய்கின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவ்வாறுதான். அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டது. இலங்கையில் புதுமையான முறையில் ஏதாவது நோய் வருகின்றதா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.
நாட்டில் தற்போது சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை இவர்கள் புரிந்து கொண்டார்கள். முன்னாள் ஜனாதிபதியாகட்டும், இன்னாள் ஜனாதிபதியாகட்டும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும். அதிகாரம் எதுவாக இருந்தாலும் அது பொருட்டல்ல.

முன்பு கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் இதுபோன்றவர்கள், சிரித்துக் கொண்டே கையசைத்து விட்டு சிறைக்குச் செல்வர். அவர்களுக்கு தெரியும் உடனடியாக வெளியே வந்துவிடலாம் என்று. அப்போதைய அரசாங்கங்கள் இப்படித்தான் சட்டத்தை நடைமுறைப்படுத்தின.
ஆனால், தற்போதைய நிலவரம் அப்படியல்ல. முன்புபோல சிரித்துக் கொண்டு கையசைத்துவிட்டு யாரும் சிறைக்குச் செல்வதில்லை. பொதுமன்னிப்பும் கிடையாது, ஜனாதிபதியின் மன்னிப்பும் கிடையாது. காப்பாற்றுவதற்கும் யாரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.