மகிந்த குடும்பத்தில் அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடி! பெரும் சிக்கலில் ஷிராந்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச 'சிரிலிய' என்ற பெயரில் வங்கிக்கணக்கு மூலம் பல மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க மற்றொரு திகதி வழங்கப்படும் என்று பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச கொழும்பு மியூசியஸ் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை கொள்வனவு செய்ததில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, ஊழலுக்கு எதிரான அமைப்பு முறைப்பாடு செய்திருந்தது.
வாக்குமூலம் அளிக்க மற்றொரு திகதி
2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிடப்பட்ட உறுதிப்பத்திரத்தின் மூலம் இந்த வீடு ஷிராந்தி ராஜபக்சவின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக சிரிலிய கணக்கிலிருந்த 350 இலட்சம் ரூபாய் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காணி ஆவணங்களை பரிசோதிக்கும் போது தெரியவந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிதி மோசடி தொடர்பாக ஷிரந்தி ராஜபக்சவை கடந்த (27) திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
2 வார கால அவகாசம்
இருப்பினும், தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று ஷிரந்தி ராஜபக்ச தனது வழக்கறிஞர்கள் மூலம் பிரிவில் முன்னிலையாக 2 வார கால அவகாசம் கோரியுள்ளார்.

இந்நிலையில்,மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க மற்றொரு திகதி வழங்கப்படும் என்று பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.