ஷிரந்திக்கு இதய அறுவை சிகிச்சை தேவையா.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலையை மதிப்பிட இன்று காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் (angiogram) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார்.
மருத்துவக் குழுவினர் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை முறைகள் தேவையா என்பதைத் தீர்மானிப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
அறுவை சிகிச்சை..
மேலும், "ஷிரந்தி ராஜபக்சவிற்கு அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. ஆஞ்சியோகிராம் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.

ஷிரந்தி ராஜபக்சவிற்கு, கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை (CABG), ஸ்டென்ட் (stent) பொருத்துதல் அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான சிகிச்சை தேவையா என்பதை மருத்துவக் குழு தீர்மானிக்கும்.
CABG மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் ஆகிய சிகிச்சைகளுக்கு நீண்ட காத்திருப்புப் பட்டியல் இருந்தாலும், மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, கொழும்பு தேசிய மருத்துவமனை தேவையான சிகிச்சையை விரைவாக வழங்கும்” என குறிப்பிட்டார்.
முன்னதாக இன்று, கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஷிரந்தி ராஜபக்சவிற்கு திறந்த இதய அறுவை சிகிச்சை (open-heart surgery) நடைபெறுவதாக வெளியான தகவல்களை உடனடியாகச் சரிபார்க்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று சிறையில் இருந்தபோது ஷிரந்தி ராஜபக்சவிற்கு திடீர் இதயக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு ஆதரவாக முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.