நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்
புதிய இணைப்பு
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான "ஷிரான் பாசிக்" என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.

மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.