ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் பாதுகாப்புக்கு ஜப்பான் இராணுவத்தை அனுப்பத் திட்டமில்லை - பிரதமர் சனாயே தகாயிச்சி அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயு டேங்கர் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஜப்பான் அரசு தற்போதைக்கு நிராகரித்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ஜப்பானிய பிரதமர் சனாயே தகாயிச்சி (Sanae Takaichi), "எஸ்கார்ட் கப்பல்களை அனுப்புவது குறித்து நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஜப்பான் சுதந்திரமாக என்ன செய்ய முடியும் மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பிற்குள் எதைச் செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இராணுவ நடவடிக்கை
ஜப்பானின் இந்த முடிவு அந்நாட்டை ஒரு இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளது. தனது எரிசக்தித் தேவைகளுக்கு மத்திய கிழக்கை பெரிதும் நம்பியிருக்கும் ஜப்பான், போரைத் தவிர்க்கும் தனது அரசியலமைப்புச் சட்டத்தின் காரணமாக வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.
ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை இதற்கு முன்பு மத்திய கிழக்கு நீர்நிலைகளில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், அவை வெறும் காவல் பணிகளே தவிர, அரசுக்கு எதிரான போர்க்கால நடவடிக்கைகள் அல்ல.

இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம்
தற்போது ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஜப்பானுக்கு இருந்தாலும், சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இராணுவத்தை அனுப்புவது மிகவும் கடினமான ஒன்று என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் தகாயிச்சி இந்த வாரம் வொஷிங்டன் சென்று டிரம்பைச் சந்திக்க உள்ளார். அப்போது, பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்காவிடம் எடுத்துரைப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan