ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 இன் தலைவர் நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு புதன்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியது.
மேலும் இந்த வழக்கில், பங்களாதேஷின் கைபந்தாவில் உள்ள தடைசெய்யப்பட்ட அமைப்பான சத்ரா லீக்கின் தலைவர், ஷகில் அகந்த் புல்புலுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
பதவி விலகல்
முன்னதாக பங்களாதேஷின் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஹசீனா தலைமையிலான அந்நாட்டு அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, அவர் தனது பதவியை விட்டு விலகி அங்கிருந்து வெளியேறினார்
இந்நிலையில் இந்தியாவுக்குத் தப்பிய ஷேக் ஹசீனா, டில்லியில் உள்ள இரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மாணவர்களின் போராட்டங்களின்போது நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டது தொடா்பாக ஹசீனா மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்
கடந்தாண்டு ஜூன் மாதம், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில், மக்கள் போராட்டத்தை கலைக்க ஹசீனா குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு முன்னிலையாகாத நிலையில், ஹசீனா மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஹசீனா பங்களாதேஷை வெளியேறிய பிறகு முதல்முறையாக அவருக்கு எதிரான வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.