நிதி நிறுவனம் ஒன்றின் மோசடி: அரசாங்கத்திடம் சாணக்கியன் கோரிக்கை
தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வைப்பிலிட்டுள்ள 6400 வைப்பாளர்களின் பணத்தை மீளப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தாமதிக்காது உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakkiyan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (24.07.2024) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது குறித்த வரையறுக்கப்பட்ட நிறுவனம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "நிதி இராஜாங்க அமைச்சரின் பதிலில் காப்புறுதி சபையால் வழங்கப்பட்டுள்ள நிதி மற்றும் காப்புறுதி ஊடாக வைப்பாளர்களுக்கு வழங்கப்படும் தொகை தொடர்பிலேயே கூறப்பட்டுள்ளது.
நிதி நிறுவனங்கள்
ஆனால், இந்த நிதி நிறுவனப் பிரச்சினை 2009ஆம் ஆண்டு மற்றைய நிறுவனங்கள் அரசியல் தலையீடுகளால் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படும் போது மத்திய வங்கியின் ஊடாக குறித்த நிறுவனத்தால் பொறுப்பேற்கப்பட்டது.
அப்போது 1.5 பில்லியன் ரூபா வருமானம் பெற்று வந்த நிறுவனமாகவே அது இருந்தது. ஆனால், அந்த நிறுவனத்தில் 6400 வைப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இன்றுவரையில் அந்த நிறுவனத்தினால் ஒரு ரூபாவேனும் வழங்கப்படவில்லை.
காப்புறுதி பணம் மட்டுமே கிடைத்துள்ளது. இலாபத்தில் இயங்கிய நிறுவனத்தை பொறுப்பேற்று அந்த நிறுவனத்தை 10 வருடங்களில் வங்குரோத்து நிறுவனமாக மாற்றி, இன்றுவரையில் வைப்பாளர்களுக்கு பணத்தை வழங்காது இருக்கின்றனர். இந்த வைப்பாளர்கள் பெரும் பணக்காரர்கள் இல்லை.
வழக்கு விசாரணை
சாதாரணமாக ஓய்வூதிய பணம் உள்ளிட்டவற்றை வைப்பிலிட்டவர்களே இருக்கின்றனர். இவர்கள் இறந்த பின்னரா பணத்தை வழங்கப் போகின்றீர்கள்? எந்த முறையிலாவது அவர்களின் பணத்தை மீளக் கொடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதன்போது பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, "இது தொடர்பில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் உள்ளன. வணிக நீதிமன்றத்தில் வழக்கும் விசாரிக்கப்படுகின்றது.
பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதன்படியே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீடுகளை மேற்கொள்கின்றோம்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
