தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்த சாணக்கியன்
தமிழரசுக்கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆசனம் கேட்டு கெஞ்சி நின்று எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே இன்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக இணைந்துள்ளதாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு 15ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் பிரசார அலுவலகம் நேற்று (29) மாலை திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், "ஒரு தேசிய அரசாங்கத்தின் தொகுதி கூட்டத்தினை விட எங்களது ஒரு வட்டாரத்திற்கான கூட்டத்திற்கு அதிகளவான மக்கள் வருகை தருகின்றார்கள் என்றால் எங்களது கட்சியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
நிராகரிக்கப்பட்டவர்கள்
இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எங்களுக்கு சவால் விடுத்து வருகின்றது. நாங்கள் எந்த வளமும் இல்லாமல் மக்கள் ஆதரவுடன் மட்டுமே பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றோம். தேசிய மக்கள் அரசாங்கத்தினர் கடந்தகாலத்தில் ஊழல் ஊழல் என்று கூறித்திரிந்தார்கள்.
தற்போது 155பேரின் நாடாளுமன்ற சம்பளத்தினை தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை செயலகமே எடுக்கின்றது. ஊழல் ஊழல் என்று சொல்லும் இவர்கள் நாங்கள் நிராகரித்தவர்களையே மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்கள்.
எங்களது கட்சி அலுவலகங்களுக்கு வந்து சீட் கேட்டு கெஞ்சி நின்றவர்களில் ஊழல்வாதிகள், பல்வேறுபட்ட நடத்தையுள்ளவர்களை நிராகரித்தவர்களையே தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளனர். சில வேட்பாளர்கள் கேட்டுவந்தவர்கள் தமிழரசுக்கட்சிக்குள் அழுதார்கள்.
நாங்கள் அவர்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் காரணமாக நிராகரித்தவர்களை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களாக நிறுத்தி அவர்கள் ஊழல்வாதிகள் பற்றிபேசுகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




