குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு பிணை
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆவணங்களை சமர்ப்பித்ததை அடுத்து, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும், கம்பஹா நீதவான் சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று (26.08.2023)பிணையில் விடுதலை செய்துள்ளார்.
நீதவானின் தீர்ப்பு
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கில் பொய்யான சாட்சியங்களை உருவாக்கியதாக குற்றப் புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு மே மாதம் 50,000 டொலர்களுக்கு கொழும்பை சேர்ந்த தொழிலதிபர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக டி.ஐ.ஜி வாஸ் குணவர்தனவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் டி.ஐ.ஜி வாஸ் குணவர்தனவின் வழக்கு தொடர்பான விசாரணையில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதற்காக, 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அபேசேகர கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |