ஆசிரியர் கலாசாலை மாணவிகளுக்கு நடந்த கொடுமை - விரிவுரையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அம்பாறை - அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விரிவுரையாளருக்கு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று(02.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு நடந்த கொடூரம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் குறித்த 55 வயதுடைய நபர், மாணவிகளின் பாடப் பரீட்சைகளுக்கான மதிப்பெண்கள் (Marks) வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக, தாம் இது குறித்து வெளியில் முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்வி வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக அமைதி காத்து வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விளக்கமறியல்
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சிக்குக் கிடைத்த ரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இந்த கொடூரச் சம்பவம் தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரிய பயிற்சி மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினரால் கடந்த வியாழக்கிழமை(01) சந்தேகநபரான விரிவுரையாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று(02.10.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியவேளையில், அவரை எதிர்வரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.