அவுஸ்திரேலியாவிலிருந்து கனடாவிற்கான அகதிகள் மீள்குடியமர்வு திட்டம் மீண்டும் ஆரம்பம்
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வந்து, பப்புவா நியூ கினியில் கடந்த எட்டு வருடங்களாக வாழ்ந்து வந்த ஏழு அகதிகள் சிறப்பு கூட்டு ஸ்பொன்ஸர் ஏற்பாட்டின் கீழ் கனடாவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மனுஸ் - நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அஸ்திரேலிய அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை என்ற அவுஸ்திரேலிய அரசின் கடுமையான அறிவிப்பினை அடுத்து, அவுஸ்திரேலியா - கனேடிய பொது அமைப்புக்களின் கூட்டு முயற்சியால் பல அகதிகள் கனடாவில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை என்று கடந்த 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசு மேற்கொண்ட முடிவையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு படகில் வந்த சுமார் மூவாயிரத்து 127 அகதிகள் மனுஸ் மற்றும் நவுறு தடுப்புமுகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
அவுஸ்திரேலியாவின் இந்த எல்லை கடந்த அகதிமுகாம்கள் குறித்தும் இதனை நிர்வகிக்கும் பொறிமுறை குறித்தும் மனித உரிமைகள் அமைப்புக்கள் முதற்கொண்டு ஐ.நா. வரை பல அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.
அதேநேரம் முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் Turnbull மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோருக்கு இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், சுமார் ஆயிரம் மனுஸ் மற்றும் நவுறு அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.
இந்த பின்னணியில் மீள்குடியமர்வதற்கான வாய்ப்பு எதுவுமின்றி நிர்க்கதியான நிலையில் இருந்த பல அகதிகள், private sponsorship என்ற திட்டத்தின்கீழ் Refugee Council of Australia, MOSAIC, Ads Up Canada Refugee Network ஆகிய அமைப்புக்களின் கூட்டு முயற்சியுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கனடாவில் மீள்குடியேறி வருகின்றனர்.
அகதிகளுக்கான இந்த கூட்டு ஸ்பொன்ஸர் பொறிமுறைக்கு அகதிகள் நல அமைப்புக்கள் இதுவரை சுமார் 30 லட்சம் டொலர்கள் திரட்டியுள்ளன.
கோவிட் காரணமாக தாமதமடைந்திருந்த இந்த கூட்டு ஸ்பொன்ஸர் பொறிமுறையின் ஊடான மீள்குடியமர்வு திட்டம் மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.