போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவோருக்கு புனர்வாழ்வு வழங்கும் வகையில் புனர்வாழ்வு நிலையம் அமைத்தல் மற்றும் உதவிநாடும் நிலையம் அமைத்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் மீளாய்வு ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (02.10.2025) இடம்பெற்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகத்தின் பங்கேற்புடன் கடந்த ஜூலை மாதம் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.
அதன்போது ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. யாழ்ப்பாணத்தில் குருநகரிலும், முல்லைத்தீவில் ஒட்டுசுட்டானிலும், மன்னாரில் முருங்கனிலும் உள்ள மருத்துவமனைகளில் உதவிநாடும் நிலையங்கள் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
குருநகர் மருத்துவமனை
குருநகர் மருத்துவமனையின் திருத்த வேலைகள் நிறைவுறுவதற்கு கால அவகாசம் தேவை என்பதால், அதுவரையில் பிறிதொரு மருத்துவமனையில் உதவிநாடும் நிலையம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் மற்றும் முருங்கன் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளமையால் அவற்றில் உடனடியாக உதவிநாடும் நிலையங்களை ஆரம்பிப்பதற்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைப்பதற்கு யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் காணி ஒதுக்கப்பட்டு இது தொடர்பான கடிதம் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள யாழ். மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வு நிலையம் நிரந்தரமாக அமைக்கப்படும் வரையில் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அல்லது முல்லைத்தீவில் இயக்குவது தொடர்பில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
முழுமையான ஆய்வு
இருப்பினும் அங்குள்ள கட்டடங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் குழுவினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழான குழுவினரும் இணைந்து விரைந்து களப்பயணம் மேற்கொள்வது என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதாவது ஓரிடத்தில் புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை கடுமையாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், தன்னை நேற்று புதன்கிழமை சந்தித்த மாணவர்கள் அது தொடர்பில் பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்தமையும் இங்கு குறிப்பிட்டார்.
எனவே விழிப்புணர்வு செயற்பாடுகளை விரிவுபடுத்துவதுடன் விரைவுபடுத்துவதன் தேவைப்பாட்டையும் ஆளுநர் வலியுறுத்தினார். சில பாடசாலைகள் விழிப்புணர்வுச் செயற்பாட்டுக்கு ஒத்துழைக்காமை தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அவ்வாறு எந்தவொரு பாடசாலையும் அவ்வாறு ஒத்துழைக்காமல் இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், அது தொடர்பில் இறுக்கமான அறிவுறுத்தல்களை வழங்க பிரதம செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.



