யாழில் புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து சேவைகள் இடம்பெறும் என யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பேருந்து நிறுவனங்களின் இணையங்களின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 15ஆம் திகதி புதிதாகத் திறக்கப்பட்ட நெடுந்தூர சேவைக்கான தனியார் பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடுவதாகத் தீர்மானித்திருந்தோம். எனினும் ஒரு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த பேருந்து நிலையத்திலிருந்து சேவையினை ஆற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
எனவே மக்களுக்காக அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தினை மக்கள் பாவிப்பதற்கும், நேரந்தியான ஒரு போக்குவரத்து சேவையினை மக்களுக்கு வழங்குதற்காக இலங்கை போக்குவரத்து சபையினருடன் இணைந்து சேவையாற்றுவதற்கு இணங்கியிருந்தோம்.
எனினும் பல மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகளிலும் அது கைகூடவில்லை. குறிப்பாக வடக்கு ஆளுநர், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், மாநகர முதல்வர், அரசாங்க அதிபர் தலைமையில் கூடி ஆராய்ந்து அதனைச் செயற்படுத்தத் தவறியதன் காரணமாக தற்போது தனியார் துறையினரை புதிய பேருந்து நிலையத்தினை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நாங்கள் மக்களுக்குத் தகுந்த சேவையினை வழங்கும் முகமாகப் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தினை மக்களது சேவைக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கிணங்க புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையினை செயற்படுத்துவதற்குத் தயாராகி வருகின்றோம்.
எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்து சேவைகளைப் புதிதாகத் திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து சேவை நிலையத்திலிருந்து செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.
கடந்த 2013ஆம் ஆண்டு இந்த புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுக் கடந்த 8 வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தினை பேருந்து நிலையமாகப் பயன்படுத்தாது வேறு தேவைக்குப் பயன்படுத்தும் நிலைமை காணப்படுகின்றது.
எனவே மக்களுக்குரிய நல்ல சேவையினை புதிய பேருந்து நிலையத்தில் செயல்படுத்துவதற்காக நாங்கள் இணங்கி எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் துறையினர் சேவையில் ஈடுபடுவதாகத் தீர்மானித்துள்ளோம்.
ஆகவே பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை
விடுத்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
